RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக வந்த ஆர்சிபி ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததற்கு அந்த மாநில அரசின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆர்சிபி-யின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள விராட் கோலி ரசிகர்களும், ஆர்சிபி ரசிகர்களும் கொண்டாடி வரும் நிலையில் இன்று பெங்களூரில் ஆர்சிபி அணியை பாராட்டும் வகையில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
ஆர்சிபிக்கு நடந்த பாராட்டு விழா:
18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது கர்நாடகம் முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், ஆர்சிபி வீரர்களை பாராட்டும் விதமாக சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவிற்கு கர்நாடக அரசு ஏற்பாடு செய்தது.
பரிதாபமாக பறிபோன உயிர்கள்:
இந்த பாராட்டு விழாவில் விராட் கோலி, ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், டிம் டேவிட், குருணல் பாண்ட்யா உள்ளிட்ட ஆர்சிபி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் மைதானத்தில் குழுமியிருக்கும் நிலையில் கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்:
கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஒட்டுமொத்த கர்நாடக மட்டுமின்றி நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புக்கு கர்நாடக மாநில அரசு ஏற்பாடுகளை முறையாக செய்யாததே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயக்கம் அடைந்தும், மூச்சுத்திணறலுக்கும் ஆளாகியுள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்ககக்கூடும் என்று கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் சிறுவன், பெண் உள்ளிட்டோரும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
காரணம் என்ன?
கர்நாடக காங்கிரஸ் அரசின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று அந்த மாநில பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். நேற்று வெற்றி பெற்ற ஆர்சிபி அணியை பாராட்டும் விதமாக அவசரம், அவசரமாக நடத்தப்பட்ட இந்த பாராட்டு விழாவில் முறையான ஏற்பாடுகளையும், ரசிகர்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் அந்த மாநில அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலே இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆர்சிபிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் அவர்கள் அதிகளவு கூடுவார்கள் என்ற நிலையில், முறையான எந்தவொரு முன்னெச்சரிக்கையும் செய்யாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் ஆகும்.
இந்த கொண்டாட்டம் தேவையா?
இத்தனை உயிர்கள் பறிபோன பிறகு இந்த கொண்ட்டாட்டம் தேவையா? என்று பலரும் இணையத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றியின் மகிழ்ச்சியை முழுவதுமாக ஒருநாள் கூட கொண்டாட முடியவில்லை என்று சில ஆர்சிபி ரசிகர்களும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில அரசுக்கு இந்த விவகாரம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மயக்கம் அடைந்தவர்களும், காயம் அடைந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் அடுத்த சில நாட்களில் மேலும் பெரிதாகும் என்றே கருதப்படுகிறது. சித்தராமையா அரசுக்கு இதனால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்றே கணிக்கப்படுகிறது.




















