தனியாருக்கு நிகரான அரசுப்பள்ளி; அடிப்படை வசதிகள் இல்லாத மாணவர் விடுதி... களத்தில் இறங்கிய அதிமுக எம்எல்ஏ
கள்ளக்குறிச்சி அருகே அரசு மாணவர்கள் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக அதிமுக எம்எல்ஏவிடம் மாணவர்கள் குற்றச்சாட்டு.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அரசு மாணவர்கள் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுவதாக ஆய்வுக்கு சென்ற அதிமுக எம்எல்ஏவிடம் விடுதி மாணவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே பெருமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கிராமப்புறங்களை உள்ளடக்கிய பகுதியில் உள்ள இந்த பள்ளி தனியார் பள்ளிக்கு போட்டி போடும் வகையில் சிறப்பாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் நன்றாக படிப்பதுடன் 10 மற்றும் +2 வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைத்து வருகின்றனர்.
இந்தப் பள்ளி ஒரு தனியார் பள்ளிக்கு நிகராக ஒழுக்கம், கல்வி, அறிவு, ஆற்றல் என அனைத்துமே சொல்லி கொடுக்கப்பட்டு மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டு வருவதால் மாணவர்கள் இந்தப் பள்ளியிலேயே படித்து பயன்பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
ஆனால் இந்தப் பள்ளிக்கென அதே பெருமங்கலம் பகுதியில் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சுமார் 50 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 25 மாணவர்கள் மட்டுமே சாப்பிட வருவதாகவும் விடுதியில் தங்கி படிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த விடுதியில் ஏன் மாணவர்கள் தங்கி படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்குக் காரணம் அந்தப் பள்ளியில் குடிநீர், கழிவறை, மாணவர்கள் படுக்கை அறை மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இன்று அந்த விடுதியில் மாணவர்கள் மதிய உணவிற்கு வரும்போது ஆய்வு மேற்கொள்ளலாம் என அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆனால் அங்கு மாணவர்களே வராமல் விடுதி வெறிச்சோடி காணப்பட்டது. உடனடியாக அங்கு இருந்த சமையலறை அழைத்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மாணவர்கள் ஏன் மதிய உணவிற்கு விடுதிக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பி விடுவோம் அதனால் பள்ளிக்கு வரவில்லை என அலட்சியமாக சமையல் தெரிவித்தார்.
உடனே விடுதியின் மாணவர் தங்கி இருக்கும் அட்னஸ் கொடுங்கள், விடுதி வார்டன் எங்கே, வாட்ச்மேன் எங்கே என கேள்வி எழுப்பினார். வார்டன் திருக்கோவிலூர் என்பதால் அவர் எப்போதுதான் வருவார் அட்னஸ் அவரிடம் தான் உள்ளது எனக் கூறினார். உடனடியாக எத்தனை மாணவர்கள் இன்று விடுதியில் தங்கி உள்ளார்கள், என்ற விவரத்தை கேட்ட பொழுது விடுதியில் எந்த மாணவருமே தங்கவில்லை என அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
உடனடியாக பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற எம்எல்ஏ செந்தில்குமார் விடுதி மாணவர்களை அழையுங்கள் அவர்களுக்கு என்ன பிரச்சனை, ஏன் விடுதியில் தங்கவில்லை என கேட்போம் என அழைத்து பேசினார். அப்போது எங்களுக்கு விடுதியில் போதிய குடிநீர், கழிவறை, படுக்கையறை, உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால் நாங்கள் அங்கு தங்குவதில்லை என தெரிவித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு எவ்வளவு உதவி செய்கிறது விடுதியில் நீங்கள் தங்கி படித்து மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும். மாணவர்களுக்கு என்ன குறை உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவியுங்கள் என தெரிவித்தார்.
அப்போது மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்றால் சுகாதாரமான உணவு, தண்ணீர், படுக்கை வசதி, மின்சார வசதி கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற எம்எல்ஏ உங்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்கிறேன் அதேபோன்று விடுதியிலேயே தங்கி விடுதி வார்டன் பணி செய்யவும், வாட்ச்மேன் பணி செய்யவும் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி போட்டி போட்டுக்கொண்டு முன்னேறும் நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய வசதி இல்லாமல் விடுதியில் தங்கி படிக்காமல் அவல நிலை நீடித்து வந்ததை எம்எல்ஏ ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.





















