IPL 2025 Team Of The Year: இதுதான்யா டீமு..! பட்டாசான ஓபனிங், கடப்பாரை மிடில் ஆர்டர், ஃபயரான கேப்டன் - எதிர்க்க முடியுமா?
IPL 2025 Team Of The Year: நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய பிளேயிங் லெவன் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2025 Team Of The Year: நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் பேட்டிங், பந்துவிச்சு என அனைத்து பிரிவிலும் அசத்திய வீரர்களை கொண்டு பிளேயிங் லெவன் உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு அபாரம் - அசத்திய வீரர்கள்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் எப்போதும் போல ரசிகர்களுக்கு கிரிக்கெட் விருந்தாக அமைந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு, 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அணியாக சிறப்பாக பெங்களூரு செயல்பட்டு இருந்தாலும், கோப்பையை வெல்லாத மற்ற அணிகளை சேர்ந்த சில வீரர்களும் அட்டகாசமான திறனை வெளிப்படுத்தி கவன ஈர்த்துள்ளனர். அதன்படி, நடப்பு தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்ட பிளேயிங் லெவன் குறித்து இங்கே அறியலாம்.
தொடக்க வீரர்கள்:
ஒரு அணியின் பேட்டிங் வலு என்பது அவர்களின் தொடக்க வீரர்களை சார்ந்தே அமையும். கடினமான இலக்கை எட்டிப் பிடிக்கவும், வலுவான இலக்கை நிர்ணயிக்கவும் தொடக்க வீரர்கள் அமைத்துக் கொடுக்கும் களம் மிகவும் முக்கியமானது ஆகும்.
சாய் சுதர்சன்: நடப்பு தொடரில் தொடக்க வீரர் என கருதினாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது சாய் சுதர்சன் ஆக தான் இருக்கும். சீசன் முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து ரன்களை குவித்து, லீக் சுற்றில் குஜராத் அணியின் ஆதிக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். 6 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 759 ரன்களை விளாசினார்.
யஷஷ்வி ஜெய்ஷ்வால்: ராஜஸ்தான் அணிக்கு வேண்டுமானால் மோசமான சீசனாக இருக்கலாம், ஆனால் ஒரு பேட்ஸ்மேன் ஆக ஜெய்ஷ்வால் நடப்பு தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுதர்ஷான் நிலைத்து நின்று ஆடக்கூடியவர் என்றால், ஜெய்ஷ்வால் தொடர்ந்து பட்டாசாய் வெடித்து அதிரடியாக ரன் குவிக்கக் கூடியவர். இதன் காரணமாகவே கூடுதல் ரன்களை சேர்த்த கில்லை காட்டிலும், ஜெய்ஷ்வாலிற்கு இந்த பிளேயிங் லெவனில் இடமளிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது வீரர்:
தொடக்க வீரர்கள் அமைத்து கொடுக்கும் நல்ல அடித்தளத்தை தொடர்ந்து கொண்டு செல்வது, அல்லது தொடக்க வீரர்களில் யாரேனும் சொதப்பினால் அந்த இடத்தை நிரப்புவது ஆகிய முக்கிய பணிகள் மூன்றாவதாக களமிறங்கும் வீரரையே சேரும். அந்த வேலையை செய்வதில் குஜராத் அணியை சேர்ந்த, ஜாஸ் பட்லர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். எந்தவொரு சூழலிலும் அணியின் ரந்ரேட் சரியாமல் இருப்பதை உறுதி செய்த பட்லர், 13 இன்னிங்ஸ்களில் 163 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 538 ரன்களை நடப்பு சீசனின் விளாசினார்.
மிடில் ஆர்டர்
மிடில் ஆர்டர் தான் ஒவ்வொரு அணியின் முதுகெலும்பாக உள்ளது. அவர்களின் செயல்பாடு தான் இறுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. அதன்படி,
சூர்யகுமார் யாதவ்: நடப்பு தொடரில் நான்காவது வீரராக களமிறங்கி, ஒட்டுமொத்த சீசனிற்கும் அபாரமான ஆட்டத்தை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தினார். களம் கண்ட அனைத்து போட்டிகளிலும் குறைந்தபட்சம் 25+ ரன்களை குவித்தார். மும்பை அணி பிளே-ஆஃப் செல்ல இவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். 16 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்களுடன், 717 ரன்களை குவித்தார்.
நிகோலஸ் பூரான்: நடப்பு தொடரில் சிக்சர் மழை பொழிந்த நிகோலஸ் பூரன், லக்னோ அணியின் பேட்டிங் ஆர்டரை தனது தோளில் சுமந்தார். அநாயசமான ஹிட்டிங் திறமையால், எதிரணி பந்துவீச்சாளர்களை கதிகலங்க செய்தார். 14 போட்டிகளில் 196.25 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 524 ரன்களை சேர்த்தார்.
கேப்டன்:
ஸ்ரேயாஸ் அய்யர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டனாக கருதப்படுகிறார். பேட்ஸ்மேன் ஆக அணியை மிடில் ஆர்டரில் வலுப்படுத்துவதோடு, 6 அன் - கேப்ட் பிளேயர்களை கொண்டே பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரையிலும் வழிநடத்தினார். நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டாலும், அணியில் உள்ள வீரர்களின் திறமையை உணர்ந்து அவற்றை சரியாக பயன்படுத்தி பஞ்சாபை பலப்படுத்தி அசத்தினார். 17 போட்டிகளில் 6 அரைசதங்கள் உட்பட 604 ரன்களை சேர்த்துள்ளார்.
ஆல்-ரவுண்டர்:
பேட்டிங் யூனிட்டிற்கும், பவுலிங் யூனிட்டிற்கும் இடையேயான ஒரு பாலமாக இந்த ஆல்-ரவுண்டர்கள் செயல்படுகின்றனர். டி20 கிரிக்கெர் பிரபலமானது முதல் ஆல்-ரவுண்டர்களின் தாக்கம் வெகுவாக உயர்ந்துள்ளது. நடப்பு தொடரில் ஆல்-ரவுண்டர்களின் தாக்கம் பெரிதாக இல்லாவிட்டாலும், க்ருணால் பாண்ட்யா இக்கட்டான சூழலில் சிறப்பாக செயல்பட்டு கவனம் ஈர்த்துள்ளார். 15 போட்டிகளில் விளையாடி, வெறும் 8.24 எகானமியில் மட்டுமே ரன்களை விட்டுக் கொடுத்து 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா ஓரளவிற்கு செயல்பட்டாலும், இக்கட்டான சூழலில் அவர் அணிக்கு பங்களிக்க தவறியது குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்து வீச்சாளர்கள்:
நடப்பு தொடரில் சிறந்த பந்துவீச்சாளர்கள் என குறிப்பிட்டால் நிச்சயம் குஜராத் அணிக்காக விளையாடிய முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணாவை தான் குறிப்பிட வேண்டும். பிரஷித் கிருஷ்ணா 25 விக்கெட்டுகளை சாய்த்து ஊதா தொப்பியை வென்றார். அதேநேரம், நடப்பு தொடரில் அதிக டாட் பால்களை வீசிய வீரருக்கான விருதை சிராஜ் வென்றுள்ளார். இந்த தொடரில் அவர் வீசிய 60 ஓவர்களில் 150 பந்துகளை டாட் பால்களை சிராஜ் வீசியுள்ளார். இந்த கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக ஜோஸ் ஹேசல்வுட்டும் இதில் இடம்பெறுகிறார். துல்லியமான பவுன்சர்களால் வீரர்களை திணறடித்ததோடு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு பக்கபலமாக விளங்கினார்.
சுழற்பந்து வீச்சாளர்:
நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் னூ அகமது மட்டுமே. இவர் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுவும் வெறும் 8.16 எகானமியில்.
பிளேயிங் லெவன்:
- சாய் சுதர்ஷன் (குஜராத்)
- யஷஷ்வி ஜெய்ஷ்வால் (ராஜஸ்தான்)
- ஜோஸ் பட்லர் (குஜராத்)
- சூர்யகுமார் யாதவ் (மும்பை)
- ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப்)
- நிகோலஸ் பூரான் (லக்னோ)
- க்ருணால் பாண்ட்யா (பெங்களூரு)
- முகமது சிராஜ் (குஜராத்)
- ஜோஸ் ஜேசல்வுட் (பெங்களூரு)
- பிரஷித் கிருஷ்ணா (குஜராத்)
- நூர் அகமது (சென்னை)
இம்பேக்ட் பிளேயர்:
சில வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கவிட்டாலும், இம்பேக்ட் வீரர்களாக களத்தில் இறங்கி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். அந்த வகையில் ப்ரப்சிம்ரன் சிங் இந்த தொடரில் இம்பேக்ட் பிளேயராக பஞ்சாப் அணிக்காக களமிறங்கியே 549 ரன்களை குவித்துள்ளார்.
(பின் குறிப்பு: இந்த பிளேயிங் லெவனானது அனுபவம் மற்றும் முந்தைய கால தரவுகளை அடிப்படையாக கொண்டிருக்காமல், நடப்பு தொடரில் எப்படி செயல்பட்டனர் என்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது)




















