(Source: ECI | ABP NEWS)
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
Covid 19 in Tamil Nadu: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உள்ளது. ஆனாலும் அந்த அளவுக்குத் தீவிரமாக இல்லை- அமைச்சர் அன்பில்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உள்ள சூழலில், பள்ளி மாணவர்களுக்கு தேவைப்பட்டால் முகக் கவசம் அணியுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜிவ்காந்தி நகரில் ரூ.18.41 கோடி மதிப்பில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர் கே.என்.நேருவுடன் இணைந்து திறந்து வைத்தார். நவீன கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பங்களுடன், பல்கலைக்கழக வளாகத்திறகு இணையாக இப்பள்ளி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்
தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட மல்லர் கம்பம் ஏறுதல் நிகழ்ச்சியைப் பார்வையிட்டு வாழ்த்துகள் தெரிவித்தார்.
தேவைப்பட்டால் முகக் கவசம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உள்ளது. ஆனாலும் அந்த அளவுக்குத் தீவிரமாக இல்லை. பள்ளி மாணவர்களுக்கு தேவைப்பட்டால் முகக் கவசம் அணியுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இதற்கிடையே கல்வித்துறை சார்பில் அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஜூன் 2ஆம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகள்
முன்னதாக தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு, இயங்கி வருகின்றன.






















