Thug Life: அடுக்கடுக்கான சர்ச்சையில் தக் லைஃப் - கடும் அப்செட்டில் இயக்குநர் மணிரத்னம்!
தக் லைஃப் படம் வெளியாவதற்கு முன்னதாக அடுக்கடுக்காக பல சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் இயக்குநரும் இந்தப் படத்தின் தயாரிப்பாளருமான மணிரத்னம் கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

'தக் லைஃப்' படம் வெளியாவதற்கு முன்னதாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த சூழலில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 5ஆம் தேதி படம் மற்ற மொழிகளில் வெளியாகினாலும், கன்னடத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் கமல் ஹாசன், சிம்பு, ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க, அபிராமி, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர், வையாபுரி, வடிவுக்கரசி உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வரும் 5ஆம் தேதி (நாளை) வெளியாக உள்ளது.
இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் டைட்டில் வெளியான போது, கமல் ஹாசனின் கதாபாத்திரத்தின் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று படக்குழு ரிவீல் செய்தனர். இதுவே ஆரம்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு அந்த சர்ச்சை வந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. 
இதை தொடர்ந்து, தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய கமல் ஹாசன் கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது என்று கூறியது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. மேலும் கமல் ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரையில் கன்னடாவில் படத்தை வெளியிடமாட்டோம் என்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த விவகாரம் நீதி மன்றம் வரை சென்ற நிலையில்... தற்காலிகமாக படம் வெளியிட தடை போடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது 'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற முத்த மழை என்ற பாடலை தமிழில் பின்னணி பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷனுக்கான பாடலை பின்னணி பாடகி சின்மயி பாடியிருந்தார். இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷன் பாடலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடி அசத்தியிருந்தார்.
இவர் மூலம் தான் இப்போது புது பிரச்சனை வந்துள்ளது. அதாவது மீடூ பிரச்சனைக்கு பிறகு சின்மயி எங்கும் பாடல் பாடக் கூடாது என்று ராதாரவியின் டப்பிங் யூனியன் சங்கம் தடை விதித்திருந்தது. ஆனால் அதையும் மீறி சின்மயி பாடல் பாடியிருப்பது இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. எந்த ஒரு தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும் தங்களது படங்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், இப்படி அடுக்கடுக்காக பிரச்சனைகள் வருவதால் படம் ரிலீசாக இன்னு ஒரு நாள் மட்டுமே இருந்தாலும், சின்மயியை பாட வைத்ததால் என்ன பிரச்சனை வர போகிறது என கடும் அப்செட்டில் இருக்கிறாராம் இயக்குனர் மணிரத்னம்.





















