NEET PG 2025: ஆக.3 நீட் முதுகலை தேர்வு? உச்ச நீதிமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்கும் மருத்துவ வாரியம்
NEET PG 2025 Exam Single Shift: இரண்டு ஷிஃப்ட்டுகளில் தேர்வை நடத்துவது தன்னிச்சையான தன்மையை உருவாக்குகிறது. அதேபோல தேர்வர்களுக்கு ஒரே மாதிரியான தரத்தில் கேள்வித் தாள்கள் இருக்காது.

நீட் முதுகலை தேர்வை ஆகஸ்ட் 3ஆம் தேதி நடத்தலாமா என்று கோரி, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக என்பிஇஎம்எஸ் எனப்படும் மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வு வாரியம் அனுப்பி உள்ளது.
முன்னதாக நீட் தேர்வை ஒரே ஷிஃப்ட்டில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஜூன் 15ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு, தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
2.42 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பம்
2,42, 678 தேர்வர்கள் நீட் முதுகலைத் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்கிடையே, இரண்டு ஷிஃப்டுகளாகத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘’ஒரே ஷிஃப்ட்டில் தேர்வை நடத்த மருத்துவ வாரியம் போதிய தேர்வு மையங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? இரண்டு ஷிஃப்ட்டுகளில் தேர்வை நடத்துவது தன்னிச்சையான தன்மையை உருவாக்குகிறது. அதேபோல தேர்வர்களுக்கு ஒரே மாதிரியான தரத்தில் கேள்வித் தாள்கள் இருக்காது’’ என்று சரமாரியாக விமர்சித்தனர்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி தேர்வா?
தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் நீட் முதுகலைத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நீட் முதுகலை தேர்வை ஆகஸ்ட் 3ஆம் தேதி நடத்தலாமா என்று கோரி, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக என்பிஇஎம்எஸ் எனப்படும் மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வு வாரியம் அனுப்பி உள்ளது.
இதன் மூலம் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தேர்வுக்காக நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் 1000-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்,
மருத்துவ வாரியத்தின் முன் உள்ள சவால்கள் என்னென்ன?
‘’கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். சரியான உட்கட்டமைப்பு, முறைகேடுகளைத் தவிர்ப்பது, கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்பன உள்ளிட்ட சவால்கள், மருத்துவ வாரியத்தின் முன் நிற்கின்றன.






















