பண மோசடி செய்ததாக பாடலாசிரியர் பா விஜய் மீது பரபரப்பு புகார்!
பாடலாசிரியரான பா விஜய்க்கு எதிராக பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர் பா விஜய். 1996-ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியான, 'ஞானப்பழம்' திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதை தொடர்ந்து வேட்டிய மடிச்சு கட்டு, உள்ளத்தை கிள்ளாதே, நீ வருவாய் என, உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
பாடலாசிரியர் என்பதை தாண்டி, நடிகராகவும், இயக்குனராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான 'அகத்தியா' படத்தை எழுதி இயக்கி இருந்தார்
பா விஜய். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் தான், பா விஜய் மீது காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி லலிதா. இவர்களின் மகன்கள் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சில படங்களை தயாரித்து வருகிறார்கள்.
இவர்கள் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு பாடல் எழுத... பா விஜய்யிடம் முன் பணமாக ரூ.50,000 கொடுத்துள்ளனர். பா விஜய்யும் ஏற்றுக் கொண்டு முன் பணம் பெற்றிருக்கிறார். ஆனால், கடைசி வரை பாடல் எழுதவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அருள்தாஸ் மற்றும் லலிதா தம்பதியினர் தாங்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், பா விஜய் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக அருள்தாஸ் மற்றும் லலிதா தம்பதியினர் கொடுங்கையூரில் உள்ள பி6 காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல் நிலைய ஆய்வாளரான சரவணன் பா விஜய்க்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தங்கள் மீது பொய் வழக்கு போட்டுவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் லலிதா குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.





















