EPS about Deputy CM: துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி - இபிஎஸ் ரியாக்ஷன் என்ன?
கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் முதலமைச்சர் பதவி கிடைக்கும். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் முதலமைச்சராகி உள்ளார். தற்பொழுது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் ஆகியுள்ளார்.
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சென்னையில் பெய்த கனமழையால் பள்ளத்தில் தடுமாறி ஒருவர் விழுந்து உயிரிழந்தார். பள்ளம் தோண்டப்பட்ட இடத்தை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு நடந்து இருக்காது.எனவே அரசு மழை வடிகால் கால்வாய்க்காக பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும். மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த துறை அமைச்சர், மேயர் உள்ளிட்டவர்கள் கூறும்போது, மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறியிருந்தார்கள். ஆனால் இன்று வரை பணிகள் முடிவு பெறவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளது. இனியாவது இந்த அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து வேகமாக, துரிதமாக மழைநீர் வடிகால் பணியை நிறைவேற்ற வேண்டும். வடகிழக்கு பருவமழையின்போது கனமழை பெய்தால் மழைநீர் வடிகால் வசதி முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருந்துவிட்டால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கும், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விடுவார்கள் என்றும் கூறினார்.
செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமீன் வழங்கி உள்ளது. செந்தில்பாலாஜி ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வரும்போது, முதல்வர் ஸ்டாலின் வரவேற்று உனது தியாகம் பெரிது என்று குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். முதலமைச்சரின் பரிந்துரையின்படி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். உச்சநீதிமன்ற நிபந்தனையை காவல்துறை கண்காணித்து நிபந்தனை மீறினால் நடவடிக்கை எடுக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதல்வரே பாராட்டி உள்ளார். செந்தில் பாலாஜி அமைச்சராக ஆகிவிட்டார். அப்பொழுது செந்தில் பாலாஜி நீதிமன்ற நிபந்தனையை மீறும்போது நடவடிக்கை எடுக்குமா? என்று ஐயப்பாடு உள்ளது. செந்தில் பாலாஜியின் வழக்குகளை தனி சிறப்பு நீதிமன்றம் அமைத்து ஒரு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பல நாட்களாக உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவார் என்று திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் குறிப்பிட்டு வந்தார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளார். உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தேனாறும், பாலாறும் ஓடும் என்று விமர்சனம் செய்தார்.
மேலும் முதல்வர் பரிந்துரை செய்தால் ஆளுநர் யாருக்கு பரிந்துரை செய்யப்பட்டதோ அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்பது அவருடைய கடமை, அதை தான் செய்துள்ளார். திமுகவிற்காக பல உழைத்துள்ளனர். சிறைக்கு சென்று பல சித்திரவதைகளை அனுப்பி வைத்துள்ளனர். மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள், நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் முதலமைச்சர் பதவி கிடைக்கும். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் முதலமைச்சராகி உள்ளார். தற்பொழுது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் ஆகியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநதி வந்தாலும் அமைச்சராக ஏற்றுக்கொள்வோம் என்று திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அடிமையாக இருக்கும் காட்சி தான் பார்த்து வருகிறோம் என்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கருணாநிதியின் மகன், உதயநிதி ஸ்டாலினின் கருணாநிதியின் பேரன் இதுதான் வாரிசு அரசியல். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். மன்னர் பரம்பரை போன்று ஆட்சி அதிகாரம் ஒரு குடும்பத்தில் சிக்கி தமிழகம் சின்னாபின்னம் ஆவதற்கு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் வாரிசு அரசியல் உள்ளது என்று கூறும் நிலையில், ஒவ்வொருவர் ஒரு தவறு செய்தால் அதையும் திமுகவும் செய்வார்களா? என்று கேள்வி எழுப்பினார்.நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்டவர்கள் வந்தபோது வாரிசு அரசியல் நடைபெறுவதாக கருணாநிதி குற்றம்சாட்டிய நிலையில், அதை தான் தற்பொழுது திமுகவிலும் நடக்கிறது.
இதைதொடர்ந்து பேசியவர், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் எங்களுக்கு அதிமுகவிற்கான அங்கீகாரம் கொடுத்துவிட்டது. ஓபிஎஸ் என்பவர் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர். அதிமுக என்பது எங்கள் தரப்பு மட்டும் தான். அவர் கட்சியில் கிடையாது, கட்சி இரண்டாக, மூன்றாக போய்விட்டது என்று பேச வேண்டாம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. கூட்டணி பலம் குறைவாக இருக்கும் நிலையில் கூடுதலாக வாக்கு பெற்றுள்ளது. ஓபிஎஸ் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. சட்டரீதியாக என்ன உள்ளது அதை பாருங்கள் என்றும் கூறினார்.
அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணியில் இருந்தது அதனால் அதிக வாக்குகள் பெற்றதாகவும், தற்போது கூட்டணியில்லாததால் கூட்டணி வாக்குகள் எங்களுக்கு வாக்கு குறைந்தது தெரிவித்தார்.