குடிநீர் வசதி கேட்டு சாலை மறியல்... பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை துண்டிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டும், துண்டிக்க வேண்டாம் என மற்றொரு தரப்பினரும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி 47ஆவது வார்டுக்கு உட்பட்ட ஆண்டிபட்டி கார்கில் நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அந்தப் பகுதி திமுக கவுன்சிலர் புனிதா பணத்தைப் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு வழங்குவதாகவும் குடிநீர் இணைப்பு வழங்க ஆயிரம் ரூபாய் கேட்பதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இலவசமாக குடிநீர் வசதி கேட்டு சேலம் - திருச்சி பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதால் குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவித்தனர். கூடுதலாக குடிநீர் இணைப்பு வழங்கி சீராக குடிநீர் வினியோகம் வழங்க வேண்டும். திமுக கவுன்சிலர் புனிதாவிடம் கேட்டால் தனது கணவரிடம் சொல்லவும் என அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் குடிநீர் இணைப்புக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே இணைப்பு வழங்கப்படும் எனவும் கூறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். பணத்தைப் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு வழங்கும் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீரான குடிநீர் விநியோகம் தங்கள் பகுதிக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே திமுக கவுன்சிலருக்கு ஆதரவாக ஒரு தரப்பு மக்கள் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. கூடுதலாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று நாங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கவுன்சிலர் பணம் ஏதும் பெறவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மாநகராட்சி காவல் துணை ஆணையாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, இளைஞர் ஒருவர் சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை பார்த்த மற்றொரு தரப்பினரும் 10க்கும் மேற்பட்ட பெண்கள் தீக்குளிக்கும் முயற்சியில் மேற்கொண்ட நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் தீக்குளிக்க முயன்ற பெண் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலந்து சென்றனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகளை கொண்டு உடனடியாக குடிசை மாற்று வாரியத்திற்கு குடிநீர் விநியோகிக்க புதிய பைப் லைன்கள் அமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கினர்.
இது குறித்து கவுன்சிலர் புனிதாவிடம் கேட்டபோது, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக சிலர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நான் யாரிடமும் குடிநீர் இணைப்பிற்கு பணம் பெறவில்லை என்று தெரிவித்தார்.