Trump India: ”அது ஒரு பேரழிவு, ஒருதலைபட்சமானது..” இந்தியா உடனான வர்த்தகத்தை சாடும் அதிபர் ட்ரம்ப்
Trump Tariff India: அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தகம் என்பது ஒருதலைபட்சமானது என, அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

Trump Tariff India: இந்தியா எதன் மீதும் வரியை குறைக்க முன்வரவில்லை என அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இந்தியாவை சாடும் ட்ரம்ப்:
இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் அமெரிக்காவிற்கு முற்றிலும் ஒருதலைப்பட்சமான பேரழிவு என்று, அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளின் உயட்மட்ட தலைவர்களை நேரடியாக சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்திய, அடுத்த சில மணி நேரங்களிலேயே ட்ரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியா எந்தவொரு பொருட்களின் மீதும் வரியை குறைக்க முன்வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா உடனான வர்த்தகம் பேரழிவு
சமூக வலைதள கணக்கில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வணிகத்தைச் செய்கிறோம், ஆனால் அவர்கள் எங்களுடன் மிகப்பெரிய அளவிலான வணிகத்தைச் செய்கிறார்கள் என்பது சிலருக்குப் புரிகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் எங்களுக்கு மிகப்பெரிய அளவிலான பொருட்களை விற்கிறார்கள், அவர்களின் மிகப்பெரிய 'வாடிக்கையாளர்', ஆனால் நாங்கள் அவர்களிடம் மிகக் குறைவாகவே விற்கிறோம். இதுவரை முற்றிலும் ஒருதலைப்பட்ச உறவு, அது பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. காரணம், இதுவரை, இந்தியா எங்களிடம் இவ்வளவு அதிக வரிகளை வசூலித்துள்ளது, எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, எங்கள் பொருட்களை இந்தியாவிற்கு விற்க முடியவில்லை. இது முற்றிலும் ஒருதலைப்பட்ச பேரழிவாகும். இந்தியா தனது எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை ரஷ்யாவிலிருந்து வாங்குகிறது, அமெரிக்காவிலிருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது. அவர்கள் இப்போது தங்கள் வரிகளை ஒன்றுமில்லாமல் குறைக்க முன்வந்துள்ளனர், ஆனால் அது தாமதமாகி வருகிறது. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அவ்வாறு செய்திருக்க வேண்டும். மக்கள் சிந்திக்க சில எளிய உண்மைகள்” என குறிப்பிட்டுள்ளார்.
புதின் உடன் பேச்சுவார்த்தை
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பொருளாதாரம், நிதி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ரஷ்யா உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து இருதரப்பினரும் கலந்தாலோசித்தனர்.
உக்ரைன் மோதல் குறித்தும் தலைவர்கள் பேசினர். அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை மோடி மீண்டும் வலியுறுத்தியதாகவும், நீடித்த தீர்வை எட்டுவதற்கு விரோதங்களை நிறுத்த வேண்டியதன் அவசரத்தை வலியுறுத்தியதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் உடன் சந்திப்பு:
தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜிங்பிங்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்களாக அல்ல, வளர்ச்சி பங்காளிகளாக செயல்பட வேண்டும் என்றும், வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதுபோக இருநாடுகளுக்கு இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்குவது, சுற்றுலா விசாக்களை வழங்குவது ஆகியவை குறித்தும் மோடி - ஜி ஜிங்பிங் இடையேயான பேச்சுவார்த்தையில் இடம்பெற்றது.
கடுப்பாகும் ட்ரம்ப்?
வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்காததன் காரணமாகவே, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அரசு வளைந்து கொடுக்கும் எனவும் அவர் எதிர்பார்த்துள்ளார். அதற்கு மாறாக, அமெரிக்க சந்தையை தாண்டி தனது ஏற்றுமதியை விரிவு செய்யும் வகையில், பல உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து வருகிறார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியிலேயே அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடுகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்தியாவை, ட்ரம்ப் தற்போது கடுமையாக விமர்சித்து வருகிறார் என கூறப்படுகிறது.



















