பொழப்பில் மண்ணை அள்ளிப்போட்ட ட்ரம்ப்.. தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படும் துறைகள் இதுதான்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரியால் தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படும் துறைகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத ஏற்றுமதி வரி இந்தியாவை மிக கடுமையாக பாதித்துள்ளது. இது தமிழ்நாட்டிலும் மிக கடுமையாக எதிரொலித்துள்ளது. இந்தியாவில் இருந்து அதிகப்படியான ஏற்றுமதி செய்யப்படும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் 7.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ட்ரம்ப் விதித்துள்ள இந்த வரியால் இந்த 7.6 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி கடும் சரிவைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. இதில் தமிழ்நாட்டின் பங்கும் அபரிமிதமானது ஆகும். அமெரிக்க அதிபர் ட்ரமப் வரி விதிப்பால் தமிழ்நாட்டில் அதிகளவு பாதிப்பை எதிர்கொள்ளும் துறைகள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
பின்னலாடைத்துறை:
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பால் தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படும் துறையாக பின்னலாடைத் துறை உள்ளது. திருப்பூரில் இருந்து மட்டும் ஆண்டுதோறும் ரூபாய் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான ஜவுளி துணிகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ட்ரம்ப் விதித்த இந்த அதிகப்படியான வரியால் இந்த 12 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி மிக கடுமையாக சரியும் அபாயம் உண்டாகியுள்ளது. திருப்பூரில் இருந்து ஆண்டுதோறும் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி பங்கு மட்டும் மொத்த ஏற்றுமதியான 40 ஆயிரம் கோடி ரூபாயில் 30 சதவீதம் ஆகும். இப்போது இந்த 30 சதவீத ஏற்றுமதி ஆபத்தைச் சந்தித்திருப்பதால் தயாரிப்பு முடக்கம், வேலையிழப்பு அபாயம் என பின்னலாடை துறை முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
உணவுத்துறை:
தமிழ்நாட்டில் இருந்து நீண்டகாலமாக வளைகுடா நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமீபகாலமாக அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து உணவுப்பொருட்கள் மிக அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, நாமக்கல் முட்டை அமெரிக்காவிற்கு மிக அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு அமெரிக்காவில் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
முட்டை மட்டுமின்றி கடல் உணவுகள், ஈரோடு மஞ்சள் உள்ளிட்ட பல விவசாயப்பொருட்களும், உணவுகளும் அங்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவிற்கு உணவுப்பொருள் ஏற்றுமதி செய்பவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உற்பத்தி துறை:
தமிழ்நாட்டில் இருந்து வேதியியல் பொருட்கள், பம்புகள், வால்வுகள், மைனிங் மற்றும் கிரஷிங் இயந்திர உதிரி பாகங்கள், கனரக வாகனங்களின் உதிரி பாகங்கள், காற்றாலை உதிரி பாகங்கள் அதிகளவு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள 25 சதவீத வரியில் 12.5 சதவீத வரியை தமிழ்நாட்டு உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வணிகர்கள் நிர்பந்தித்து வருகின்றனர். இந்த சூழலில், அதிகபடியான வரியால் தமிழ்நாட்டு வணிகர்கள் மீது சுமை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
மின்னணு ( எலக்ட்ரானிக்) துறை:
இந்தியாவில் எலக்ட்ரானிக் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் இருந்து அதிகளவு எலக்ட்ரானிக் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவிற்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் 30 சதவீதம் ஏற்றுமதி வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்தே செல்கிறது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியில் தமிழ்நாட்டில் இருந்து 40 சதவீதம் நடக்கிறது. தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி துறை மிக கடுமையாக பாதிக்கப்படுவதுடன் பொருட்கள் முடங்கும் அபாயம் உண்டாகியுள்ளது.
இந்த துறைகள் மட்டுமின்றி ஐடி துறையில் மறைமுகமாக அதன் வருவாயில் இந்த வரிவிதிப்பு எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த துறைகள் மட்டுமின்றி சிறிய அளவில் மற்ற துறையினரும் அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் நிலையில், அந்த துறையினரும் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பிரதமர் மோடிக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





















