PM Modi: ட்ரம்புக்கு ஆப்பு சீவிய மோடி.. ரஷ்யா, சீனாதான் இனி துருப்புச்சீட்டு! இனி புது ரூட்டு!
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருவரிடமும் பிரதமர் மோடி நெருங்கிய நட்புறவுடன் காணப்பட்டது அமெரிக்காவிற்கு பதிலடியாக காணப்பட்டது.

அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா உலகின் பல நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. வர்த்தகம் மட்டுமின்றி உலகின் எதிரெதிர் துருவமாக திகழும் இரண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கும் நாடும் இந்தியா ஆகும்.
ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி:
ஆனால், அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்பு இந்தியா மீதான அவரது நடவடிக்கை விரும்பத்தகாத வகையில் உள்ளது. குறிப்பாக, சமீபத்தில் அவர் விதித்த 50 சதவீத ஏற்றுமதி வரி இந்திய பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் தலையிட்டது மட்டுமின்றி இந்திய பொருளாதாரத்திற்கு இடையூறு செய்யும் வகையிலும், இந்திய -ரஷ்ய உறவிற்கும் இடையூறு செய்யும் வகையிலும் ட்ரம்பின் செயல்பாடுகள் இருந்து வருகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு:
தனது செயல்பாட்டால் இந்தியா தனக்கு அடிபணியும் என்று எதிர்பார்த்த ட்ரம்பிற்கு பேரதிர்ச்சியாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு அமைந்துள்ளது. சீனாவில் நடந்த இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 25 நாட்டின் தலைவர்கள் பங்கேற்றனர்.
புதின், ஜின்பிங்கிடம் மோடி நெருக்கம்:
இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி முன் எப்போதும் இல்லாத வகையில் ரஷ்ய அதிபர் புதினிடம் மிகவும் நெருக்கமான நட்புடன் காணப்பட்டார். மேலும், சீன அதிபர் ஜின் பிங்கிடமும் மிகவும் நல்ல நட்புடன் பேசினார். குறிப்பாக, இந்த மாநாட்டின் ஒரு பகுதியில் புதின் கையைப் பிடித்து மோடி அழைத்துக் கொண்டு சென்று ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகிய மூன்று பேரும் கல்லூரி நண்பர்கள் போல பேசிக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோடியின் இந்த நகர்வு ட்ரம்பின் செயல்பாட்டிற்கு இந்தியாவின் எதிர்வினையாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்தியாவிற்கு உலகளவில் மிகப்பெரிய அரணாக நிற்கும் நாடாக ரஷ்யா உள்ளது. இந்தியாவின் கடந்த கால வரலாற்றைப் பார்த்தால் ரஷ்யா எந்தளவு உறுதுணையாக இருக்கிறது என்பதை நாம் உணர முடியும்.
இந்தியாவுக்கு என்ன லாபம்?
இந்தியா - சீனா இடையே நெருக்கமான உறவு இல்லாவிட்டாலும் அமெரிக்காவுடன் பொருளாதாரத்தில் சுமூகமான உறவு இல்லாவிட்டால் சீனாவுடன் இணக்கமாக செல்வதே சிறப்பானதாக உள்ளது. இதனால் எல்லைப் பிரச்சினையில் தீர்வு, பொருளாதார பந்தம் ஆகியவற்றில் இந்தியாவிற்கு லாபம் கிட்டும்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில், இந்தியா ரஷ்யா மற்றும் சீனாவுடனான வர்த்தக உறவை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரிடம் நெருக்கமாக இருந்தது ஆகும்.
இந்தியா வரும் புதின்:
இனி வரும் நாட்களில் வர்த்தக ரீதியான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பை கண்டிக்கும் விதமாகவே கடந்த இரு வாரங்களில் ட்ரம்ப் 4 முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அதை மோடி நிராகரித்து விட்டார்.
மேலும், வரும் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர உள்ளார். ரஷ்ய - உக்ரைன் போரை நிறுத்துவதற்கும் இந்தியா மிகப்பெரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.





















