
Pongal Special Bus: பொங்கல் முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சேலம் கோட்டம் சார்பில் இன்று முதல் 18 ஆம் தேதி வரை 400 சிறப்பு பேருந்துகள், மாற்று பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழிபட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டமானது, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சேலம் கோட்டம் சார்பில் இன்று (12 ஆம் தேதி) முதல் 18 ஆம் தேதி வரை 400 சிறப்பு பேருந்துகள், மாற்று பேருந்துகள், தடை நீட்டிப்பு மற்றும் வழிபட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பேருந்துகள் சேலம் புதிய பேருந்து நிலையம், பெங்களூர், சென்னை கோயம்பேடு, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளது. இம்மாவட்டங்களில் நகர பகுதியில் இன்று (12 ஆம் தேதி ) முதல் 18 ஆம் தேதி வரை பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து முக்கிய டவுன் பேருந்து நிலையங்களில் இருந்து போக்குவரத்து கண்காணிக்கவும் மற்றும் சீர்படுத்தவும் அலுவலர்கள் 24 மணி நேரமும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், இணையதளம் மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் பயணிகள் பயணிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கல் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவிற்கு பொதுமக்கள் புக்கிங் செய்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

