IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிப்ரவரி 28 அன்று ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் முன்னணித் தொழில்துறையினர், கல்வியாளர்கள் முன்னிலையில் இன்வென்டிவ் 2025 ஐத் தொடங்கி வைக்கவிருக்கிறார்.

ஐஐடி சென்னை, இன்வென்டிவ் (IInvenTiv) 2025 என்ற இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக் கண்காட்சியை நடத்தத் தயார் நிலையில் உள்ளது.
பிப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், ஐஐடி-க்கள், என்ஐடி-க்கள் என்ஐஆர்எப் தரவரிசையில் இடம்பெற்றுள்ள முதல் 50 கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் தத்தமது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவார்கள்.
மத்திய அரசு சார்பில் கண்காட்சி
இன்வென்டிவ் 2025’ நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்காக 185 கண்டுபிடிப்புகளை நிபுணர் குழுவினர் ஏற்கனவே தெரிவு செய்துள்ளனர். இன்னும் பல கண்டுபிடிப்புகள் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் இக்கல்வி நிறுவன வளாகத்தில் இக்கண்காட்சி நடைபெறுகிறது.
தொழில்நுட்ப பரிமாற்றம், உரிமம் வழங்குதல், தொழில்துறை-கல்வி ஒத்துழைப்பின் பிற இடங்கள் மூலம் ஆய்வக ஆராய்ச்சியை அன்றாடம் பயன்படுத்தும் தயாரிப்புகளாகவும் பயன்பாடுகளாகவும் வணிகமயமாக்குவதே இதன் நோக்கமாகும்.
இதுபற்றி ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, ’’விக்சித் பாரத்-2047 சந்தேகத்திற்கு இடமின்றி ஸ்டார்ட்அப் மற்றும் தயாரிப்பு நாடாக இருக்கும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தவும், தாங்கள் தொழில் ஊக்குவிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பப் பரிமாற்றங்கள், சந்தைக்கான ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் இன்வென்டிவ் ஒரு தளமாக அமைந்துள்ளது’’ என்றார்.
இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிப்ரவரி 28 அன்று ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் முன்னணித் தொழில்துறையினர், கல்வியாளர்கள் முன்னிலையில் இன்வென்டிவ் 2025 ஐத் தொடங்கி வைக்கவிருக்கிறார்.
பங்கேற்கும் கல்வி நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் வகையில் பல்வேறு அரங்குகள், கருப்பொருள்கள் தொடர்பான உரைகள், குழு விவாதங்கள் என இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் – சிந்தனை முகாம்: 4 இணையான அமர்வுகள் (பிற்பகலில்)
- விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு, விண்வெளி
- கடல்சார் தொழில்நுட்பங்கள்
- மருத்துவம் / சுகாதாரப் பராமரிப்பு பொறியியல்
- சுழற்சி (circularity) - நிலைத்தன்மை (ஆற்றல்- மின்-இயக்கம்)
இரண்டாம் நாள் – சிந்தனை முகாம்: 2 இணையான அமர்வுகள் (ஒவ்வொன்றும் காலை - பிற்பகல்)
- செயற்கை நுண்ணறிவு/ இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள்
- ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு
- மேம்பட்ட உற்பத்தி (தொழில்துறை 4.0+/5.0)
- கிராமப்புற தொழில்நுட்பங்கள்
3ஆவது நிகழ்வு
2022-ம் ஆண்டில் ஐஐடி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்வென்டிவ் தொடங்கப்பட்டது. இதில் ஐஐடிக்களின் ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பணிகள் மட்டும் இடம்பெற்றன. ஜனவரி 2024 -ல் ஐஐடி ஐதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது நிகழ்ச்சியில் ஐஐடிக்கள், ஐஐஎஸ்சிக்கள், ஐஐஎஸ்இஆர்கள் தவிர என்ஐஆர்எப் தரவரிசையில் முதல் 50 இடங்களைப் பிடித்துள்ள கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்தத் தொடரின் மூன்றாவது நிகழ்வை தற்போது ஐஐடி மெட்ராஸ் நடத்துகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

