சிதம்பர மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! விரைவில் புதிய பேருந்து நிலையம்.!- முதலமைச்சர் ஸ்டாலின்
Chidambaram New Bus Stand: கடலூரில் ரூ. 704 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.704.89 கோடி மதிப்பீட்டிலான 602 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.384.41 கோடி மதிப்பீட்டிலான 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, 4,4690 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து, சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், மஞ்சக்குப்பம் மைதானம் சுற்றுவட்டாரப்பகுதிகள் மேம்படுத்தப்படும் என்றும் பண்ருட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்றும் பல அறிவிப்புகளை கடலூர் மாவட்டத்திற்கு அறிவித்தார்.

”மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளரும்”
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் , தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை அளிக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து பேசினார். அவர் பேசியதாவது,
“ மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. சமூக நீதியை சிதைக்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் , நமது பிள்ளைகளை தடுக்க நினைக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையால், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் கல்வி தடுக்கப்படும். மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி என பிளாக்மெயில் செய்வது அரசியல் இல்லையா?; கல்வியை வைத்து அரசியல் செய்வது நீங்களா?, நாங்களா?
Also Read: CM Stalin: 1,600 கி.மீ நெடுஞ்சாலை, 2000 மேம்பாலங்கள்: முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
”ஸ்டாலின் இருக்கும்வரை வர முடியாது”
மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டிய திட்டங்களுக்கான நிதிப் பங்கை தரவும் மத்திய அரசு மறுக்கிறது. எல்லாவற்றையும் சமாளித்துதான் திட்டங்களை தீட்டி வருகிறோம். தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கி கொண்டிருக்கும் வரியை தர முடியாது என கூற ஒரு நொடி போதும். தேன்கூட்டில் கல் எறியாதீர்கள்.
மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளரும். மாநிலங்கள் வளர்ச்சியை பார்த்து மத்திய அரசு மகிழ்ச்சி கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான கூட்டாட்சி தத்துவம். மாநில அரசின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் அரசாகவும், தடுக்கும் அரசாகவும் மத்திய அரசு உள்ளது.
தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும். நீங்கள் வந்துதான் வளர்க்க வேண்டும் என்று 'தமிழ்' உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை. தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் எதிரான எந்த செயல்பாடுகளும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை இந்த மண்ணுக்குள் வர முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
Also Read: திருச்சி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! விமான நிலையம் போல பஞ்சப்பூர் பேருந்து நிலையம்.! எப்போது வரும்?





















