"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
இந்திய மொழிகளுக்கு இடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை என்றும் மொழியை வைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மொழியை வைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய கல்வி கொள்கையின் மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
டெல்லியில் 98ஆவது அகில பாரதிய மராத்தி சாகித்திய சம்மேளனத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, "இந்திய மொழிகளுக்கு இடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. மேலும், ஒவ்வொன்றும் மற்றொன்றை வளப்படுத்தி இருக்கின்றன. மொழிகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் முயற்சிகளுக்கு பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளன.
பெரும்பாலும், மொழிகளின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இந்தியாவின் பன்மொழி பாரம்பரியம் அதற்கு பொருத்தமான பதிலடியை கொடுத்துள்ளது. இந்தத் தவறான கருத்துக்களிலிருந்து நம்மைத் தூர விலக்கி, அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நமது சமூகப் பொறுப்பு" என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், "இந்தியா உலகின் பழமையான வாழும் நாகரிகங்களில் ஒன்றாகும். ஏனெனில், அது தொடர்ந்து உருவாகும் புதிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு புதிய மாற்றங்களை வரவேற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய பன்மொழி பாரம்பரியத்தை கொண்ட நாடு இந்தியா என்பது இதற்கு ஒரு சான்றாகும். இந்த பன்மொழி கலாசாரம் நமது ஒற்றுமையின் அடித்தளம்" என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இது , தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு, திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
கடலூரில் இன்று வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. சமூக நீதியை சிதைக்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் , நமது பிள்ளைகளை தடுக்க நினைக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையால், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் கல்வி தடுக்கப்படும். மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி என பிளாக்மெயில் செய்வது அரசியல் இல்லையா?; கல்வியை வைத்து அரசியல் செய்வது நீங்களா?, நாங்களா?" என கேள்வி எழுப்பினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

