CM Stalin: அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?..தடைகளை உடைப்போம்- முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை..
CM Stalin: தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கி கொண்டிருக்கும் வரியை தர முடியாது என கூற, ஒரு நொடி போதும் என்று மத்திய அரசை கண்டித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் எதிரான எந்த செயல்பாடுகளும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை இந்த மண்ணுக்குள் வர முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இது , தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு , திமுக , அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மத்திய அரசை கடுமையாக கண்டித்தன.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு கட்டுமான அறிவுப்புகளை வெளியிட்டார்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடலூர் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பின் போது மாணவிகளிடம் உரையாடினார். pic.twitter.com/LxHjnGIQR3
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 21, 2025
அப்போது பேசுகையில், “ மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. சமூக நீதியை சிதைக்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் , நமது பிள்ளைகளை தடுக்க நினைக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையால், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் கல்வி தடுக்கப்படும். மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி என பிளாக்மெயில் செய்வது அரசியல் இல்லையா?; கல்வியை வைத்து அரசியல் செய்வது நீங்களா?, நாங்களா?
மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டிய திட்டங்களுக்கான நிதிப் பங்கை தரவும் மத்திய அரசு மறுக்கிறது. எல்லாவற்றையும் சமாளித்துதான் திட்டங்களை தீட்டி வருகிறோம். தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கி கொண்டிருக்கும் வரியை தர முடியாது என கூற ஒரு நொடி போதும். தேன்கூட்டில் கல் எறியாதீர்கள்.
மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளரும். மாநிலங்கள் வளர்ச்சியை பார்த்து மத்திய அரசு மகிழ்ச்சி கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான கூட்டாட்சி தத்துவம். மாநில அரசின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் அரசாகவும், தடுக்கும் அரசாகவும் மத்திய அரசு உள்ளது.
தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும். நீங்கள் வந்துதான் வளர்க்க வேண்டும் என்று 'தமிழ்' உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை. தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் எதிரான எந்த செயல்பாடுகளும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை இந்த மண்ணுக்குள் வர முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.




















