Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன என்பது குறித்து, பொது நிகழ்ச்சி மேடையிலேயே அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்.

Udhayanidhi: ஆண்மை தொடர்பான அமைச்சர் கோவி. செழியனின் கருத்தில் இருந்த தவறை, துணை முதலமைச்சர் உதயநிதி உடனடியாக திருத்தினார்.
அமைச்சர் பேசியது என்ன?
சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை சார்பில், இந்திய குற்றவியல் சங்கத்தின் 6-வது சர்வதேச மற்றும் 45-வது அகில இந்திய குற்றவியல் மாநாட்டை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கு எந்த தீங்கு வந்தாலும், ஒரு இடர்பாடு வந்தாலும், முதலில் குரல் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். ஒரே கல்வி பாடத்திட்டத்தை, ஒற்றை அரசாக, சர்வாதிகார போக்காக, ஒன்றிய அரசு திணிக்க முற்படுகிற போது, இந்தியாவில் இருக்கிற மாநிலங்களில், துணிந்து எழுந்து நிற்கிற ஆண்மையுள்ள மாநிலம் தமிழ்நாடு” என குறிப்பிட்டார்.
ஆண்மை என்றால் என்ன? - உதயநிதி
தொடர்ந்து விழாவின் சிறப்புரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி, “அமைச்சர் கோவி. செழியன் சொன்ன கருத்தில் ஒரு சின்ன திருத்தம் உள்ளது. இங்கே ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கின்றார்கள். எனவே ஆண்மை என்றால் தனியாக வீரம் என்றெல்லாம் கிடையாது. அவர் குறிப்பிடும் போது, இந்தியாவிலேயே அதிகமாக மகளிர் காவலர்கள் உள்ள மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு என்று கூறினார். நான் அவரிடத்தில் தெரிவிப்பது, உங்களிடத்தில் தெரிவிப்பதும் ஒன்றே. இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை. ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்” என துணை முதலமைச்சர் உதயநிதி தனது பேச்சை தொடங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள், இந்திய குற்றவியல் சங்கத்தின் 6 வது சர்வதேச மற்றும் 45 வது அகில இந்திய குற்றவியல் மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @GChezhiaan pic.twitter.com/J1vQZzggGd
— TN DIPR (@TNDIPRNEWS) February 21, 2025
உதயநிதி பெருமிதம்:
தொடர்ந்து பேசுகையில், “மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக சட்டத்திருத்தம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் பெறப்படும் நல்ல கருத்துக்களை செயல்படுத்துவதில் இந்த அரசு முழு மனதுடன் உள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் அதிக அளவில் காவல் துறையில் இருக்கும் இடத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம்” என துணை முதலமைச்சர் உதயநிதி பேசினார்.





















