Minister Rajendran: தமிழ்நாட்டில் 86.7 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது - அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம்
உத்திரப்பிரதேசத்தில் 29 சதவீதமும், தேசிய அளவில் 51.2 சதவீதமும்தான் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சேலம் மாநகர் மணக்காடு அரசு பள்ளியில் சமத்துவ வளைகாப்பு விழா சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்று 150 கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இந்த விழாவில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தமிழ்நாடு முதல்வர் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் ஊட்டச்சத்து இயக்கத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள 22 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசை தாம்பூலங்கள் மற்றும் 5 வகை உணவுகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. மிகவும் உணர்வபூர்வமான இந்த விழாவில் பங்கேற்று வாழ்த்துவது மனதிற்கு நெகிழ்ச்சியுடையதாக அமைந்துள்ளது. கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு தாயிற்கும் மறுபிறவி என்றே குறிப்பிடும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதை உணர்ந்த கலைஞர் ஆட்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். கர்ப்ப காலங்களில் பொருளாதார வசதியற்ற குடும்பத்தை சார்ந்த பெண்களும் தேவையான ஊட்டச்சத்து பெறுவதை உறுதிபடுத்தினார். மகப்பேறுக்கு நிதியுதவி, தடுப்பூசி இரும்புச்சத்து மருந்துகள் ஊட்டசத்துமாவு, சேவையாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கப்பரிசு என கர்ப்பிணிகள் மீது தனிக்கவனம் செலுத்தும் அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. அந்தவகையில் தமிழ்நாடு முதல்வர் திராவிட மாடல் அரசு ஒரு தந்தையாக இருந்து மகப்பேறு திட்டங்களை மேம்படுத்தி வருகிறார் என்றார்.
குறிப்பாக, இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே கர்ப்பமடைந்ததை பதிவு செய்தது முதல் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலை, குழந்தை பிறந்து தடுப்பூசி செலுத்துவது, குழந்தைகளின் ஊட்டச்சத்து வரை கர்ப்பிணிகள் மீது தனிக்கவனத்துடன் கண்காணித்து உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு அங்கமாக கர்ப்பிணித் தாய்மார்களின் நலம் தாய்சேய் நலனை மேம்படுத்தவும் விழிப்புணர்வு நிகழ்வாக இந்த சமுதாய வளைகாப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் உள்ள 22 வட்டாரங்களில் நடத்தப்படுகிறது. 2,200 பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வளையல், ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் சீதனப் பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இதுபோன்ற சமூகநலத் திட்டங்கள் செயல்படுத்துவதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடானது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் குறைவானதாக அமைந்துள்ளது. குழந்தைக்கும் தாயிற்கும் பாதுகாப்பான மகப்பேறு நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 86.7 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் 29 சதவீதமும், தேசிய அளவில் 51.2 சதவீதமும்தான் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார். எனவே முதல்வர் இதுபோன்ற திட்டங்கள் என்பது நமது சமூகத்தை முன்னேற்றும் சமூகநல திட்டங்களாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

