சேலத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றி கொன்று விட்டு தலைமறைவான கணவரை நள்ளிரவில் கைது செய்த போலீஸ்...!
மாலை நேரம் என்பதால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தும் யாரும் ஏசுதாசை பிடிக்க முயற்சிக்க வில்லை. ஆடைகள் உருகிய நிலையில் ரேவதி கதறி அழுததாகவும், கத்திக் கூச்சலிட்டு தாகவும் கூறப்படுகிறது
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது மாநகராட்சி ஊழியர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வையப்பமலை பகுதியை சேர்ந்தவர் ரேவதி இவருக்கும் சேலம் குகை பகுதியில் வசித்துவரும் சேலம் மாநகராட்சியில் மருந்து அடிக்கும் ஊழியரான ஏசுதாஸ் என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், ஏசுதாஸ் தனது மனைவி ரேவதி மீது அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார். இதனால் இந்த தம்பதிகளுக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் ஏசுதாஸுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ரேவதி கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்ற நிலையில், தனது கணவர் ஏசுதாஸ் மீது சேலம் நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று மாலை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ரேவதி, தனது கணவனுடன் சென்று வாழ விருப்பமில்லை, நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து விவாகரத்து பெற்று கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர், காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு செல்ல சேலம் பழைய பேருந்து நிலையம் சென்றுள்ளனர். இந்நிலையில், அவரை பின்தொடர்ந்து சென்ற கணவன் ஏசுதாஸ், தான் கொண்டுவந்த கேனில் வைக்கப்பட்டிருந்த ஐந்து லிட்டர் ஆசிட்டை தனது மனைவி ரேவதி மீதும் ரேவதியின் தாய் மீதும் ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். 50% உடல் உருகிய நிலையில் ரேவதி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாலை நேரம் என்பதால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தும் யாரும் ஏசுதாசை பிடிக்க முயற்சிக்க வில்லை. ஆடைகள் உருகிய நிலையில் ரேவதி கதறி அழுததாகவும், கத்திக் கூச்சலிட்டு தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரேவதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் உயிரிழந்தார். தப்பி ஓடிய ஏசுதாஸ் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட ஏசுதாஸிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கணவனே ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற ஏசுதாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.