(Source: ECI/ABP News/ABP Majha)
Minister Gandhi: போலி பட்டுப்புடவைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது -அமைச்சர் காந்தி
பட்டு என்பது கைத்தறி நெசவால் நெய்த ரகங்கள் என்பதால் விலை சற்று கூடுதலாக இருக்கும். மாறாக தனியார் விற்பனை நிலையங்களில் போலியான பட்டுப் புடவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
சேலத்தில் புதுப்பிக்கப்பட்ட கோஆப்டெக்ஸ் கூட்டுறவு கைத்தறி ஜவுளி விற்பனை நிலையத்தை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் திறந்து வைத்தனர். சேலம் கடை வீதியில் 12000 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த நிலையத்தில் தனியார் ஜவுளி நிறுவனங்களுக்கு இணையாக நகரம் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி, அரசு பொறுப்பேற்பதற்கு முன்னதாக நஷ்டத்தில் இயங்கி வந்த கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தை முதல் ஆண்டிலேயே சுமார் ரூ.7 கோடி நஷ்டத்தை ஈடுகட்டி ரூ.9.49 கோடி லாபத்தில் இயங்கிடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் சேலம் கோ-ஆப்டெக்ஸ் நிலையத்திற்கு ஆய்வு செய்திட வந்தபோது இதனை மேம்படுத்திட வேண்டுமென முடிவு செய்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் நவீனமயமாக்கப்பட்டு நகரும் மின் படிக்கட்டுகளுடன், இரண்டு தளங்களில் தற்போது சேலம் கோ ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையம் தனியார் ஜவுளிக் கடைகளை மிஞ்சும் வகையில் புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விற்பனை விவரம்:
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தைப் பொறுத்த வரையில் இந்தியா முழுவதும் 154 கடைகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 105 கடைகள் உள்ளன. மேலும், இதர மாநிலங்களில் 49 கடைகள் உள்ளன. சேலம், மாநகர் கடை வீதியில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவன தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தின் மூலம் 2021-22-ஆம் ஆண்டில் ரூ.6.06 கோடி, 2022-23-ஆம் ஆண்டில் ரூ.6.59 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஆண்டு தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்திற்கு ரூ.12 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோ-ஆப் டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தனியார் கடைகளுக்கு நிகராக 500 முதல் 1,000 புதிய ரகங்கள் மற்றும் குறிப்பாக, சில்க், பட்டு மற்றும் காட்டன் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய ரகங்கள் விற்பனைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு ஏன்?
தமிழக முதல்வர் தோடர் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் தாங்கள் விரும்பி அணியக்கூடிய எம்ராய்டிங் செய்யப்பட்ட துணி வகைகளை கோ-ஆப் டெக்ஸ் மூலம் விற்பனை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், ஊட்டியில் இதற்கான கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்தப்பட்டு எம்ராய்டிங் ரகங்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் அவர்களுக்கு வழங்கி மலைவாழ் மக்கள் விரும்பும் எம்ராய்டிங் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தற்போது அனைத்து கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப் டெக்ஸில் விற்கப்படும் பட்டு சேலைகளைப் பொறுத்தவரை அதில் இடம்பெற்றுள்ள பட்டு சரிகை மற்றும் வெள்ளி சரிகைகளின் விவரங்கள் இணைக்கப்பட்டிருக்கும். சுத்தமான தங்கம் மற்றும் வெள்ளி சரிகை என்பதால் நாட்கள் செல்ல செல்ல தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றத்திற்கு ஏற்ப, கோ-ஆப் டெக்ஸில் வாங்கிய பட்டு சேலைகளின் விலைகளும் உயர்வானதாக அமைந்துள்ளது.
அதேபோன்று, கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு அன்புடன் அணுக வேண்டும் என்பது குறித்தும் இக்கோ-ஆப் டெக்ஸ் பட்டு மாளிகையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ரகங்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து அழகாக எடுத்துரைக்கும் வகையில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய நடவடிக்கைகள்:
இளைய தலைமுறையினர் கோ-ஆப் டெக்ஸில் விற்கப்படும் ரசாயன கலவை இல்லாத ஆர்கானிக் வண்ணப் பூச்சுகளாலான துணி பெரிதும் விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக கோ-ஆப் டெக்ஸ் ஆன்லைன் வர்த்தகத்திலும் ரூ.1.50 கோடி மதிப்பில் விற்பனை செய்து தனது முத்திரையினைப் பதித்து வருகிறது. கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இதுபோன்ற பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், நவீன காலத்திற்கு ஏற்ப அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.
மேலும், பட்டு என்பது கைத்தறி நெசவால் நெய்ய கூடிய ரகங்கள் என்பதால் விலை சற்று கூடுதலாக இருக்கும். மாறாக தனியார் விற்பனை நிலையங்களில் போலியான பட்டுப் புடவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. போலி பட்டு புடவைகளை தயாரிப்பவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கைத்தறி ஜவுளி ரகங்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அரசு ஊழியர்களிடமும் வர வேண்டும் என்றும் கைத்தறி ஜவுளிகளை வாங்க அரசு ஊழியர்களை வற்புறுத்த கூடாது என்றார்.