”முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசியது என்ன..?” திருமாவளவன் பரபரப்பு பேட்டி..!
”திமுகவுடனான கூட்டணியில் எந்த சிக்கலும் விரிசலும் இல்லை - திருமாவளவன்”
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும் டி.கே.எஸ் இளங்கோவனும் பங்கேற்பார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னிடம் உறுதி அளித்துள்ளார். மது ஒழிப்புதான் திமுகவின் கொள்கை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் திமுகவுடனான கூட்டணியில் எந்த சிக்கலும் விரிசலும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு என்பது எங்களது கொள்கை - அழுத்திச் சொன்ன திருமா
ஆட்சியில் பங்கு என்ற என்னுடைய கருத்து 1999 முதல் பேசப்பட்டு வருவதுதான். அது இப்போது சமூக வலைதளங்களில் பெரிதாக விவாத பொருளாக மாறியிருக்கிறது. அந்த கோரிக்கையை எப்போதும் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். பேசிக்கொண்டேதான் இருப்போம். இப்போது அது குறித்து முதல்வர் ஸ்டாலின் எங்களிடம் ஒன்றும் கேட்கவில்லை. எந்த நேரத்தில் எந்த கொள்கையை எந்த நிலைப்பாட்டை வலுவாக பேசவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அந்த சமயத்தில் அதனை பேசுவோம்.
மது ஒழிப்பு மாநாட்டிற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - திருமா
தற்போது விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மதுவால் வாழ்வு இழந்த ஆயிரக்கணக்கான கைம்பெண்களின் கோரிக்கையைதான் இந்த மாநாடு மூலம் எடுத்து செல்லவிருக்கிறோம். இதை திசைத்திருப்பும் வகையில் தேர்தல் அரசியோலோடு பிணைத்துப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என திருமா தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு நேரடியாக அழைப்பா ?
மேலும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவிற்கு கூட நாங்கள் நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. பேசப்பட்ட கருத்துக்களின் படி இந்த மாநாட்டில் திமுக சார்பில் 2 பேர் பங்கேற்பார்கள் என்று முதல்வர் தெரிவித்தார், இந்த கருத்தில் உடன்படும் கட்சிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பதில் எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை என்றும் திருமா பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
விரிசலோ நெருடலோ இல்லை
விசிக சார்பில் மது விலக்கு தொடர்பாக முதல்வரிடம் அளிக்கப்பட்ட மனு! pic.twitter.com/6ny4uNEEMx
— Raja Shanmugasundaram (@SRajaJourno) September 16, 2024
அதோடு, திமுகவிற்கும் - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே எந்த விரிசலோ நெருடலோ இல்லை என்றும் திமுக கூட்டணியில் சலசலப்பு என்று பரவும் செய்திகள் வெறும் மீடியா ஹைஃப் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதோடு மது ஒழிப்பு என்பது எல்லோருக்குமானது என்றும் இதில் அரசியல் கலப்பு எதுவும் இல்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வந்த சர்ச்சை - சுமூகமான உறவு
திமுகவுடன் எந்த சிக்கலும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதால், கூட்டணி குறித்து இதுநாள் வரை பரவிவந்த தகவல்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுன் உடனான சந்திப்புக்கு பிறகு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அதோடு, மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுக சார்பிலும் பிரதிநிதிகளை முதல்வர் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்திருக்கும் நிலையில், மாநாடு திட்டமிட்டப்படி நடைபெறுவது என்பது உறுதியாகியிருக்கிறது.
ஆனால், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இந்த மாநாட்டில் பங்கேற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது