6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்! - மருத்துவர்கள் போட்ட கண்டிஷன்!
சைஃப்பின் குடும்பத்தினர், அவரது மனைவி கரீனா கபூர், தாய் ஷர்மிளா தாகூர் மற்றும் மகள் சாரா அலி கான் ஆகியோர் மருத்துவமனையில் அவருடன் இருந்தனர்.

கத்தியால் குத்தப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு சைஃப் அலி கான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியின் போது பலமுறை கத்தியால் குத்தப்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான், இன்று பிற்பகல் லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சைஃப்பின் குடும்பத்தினர், அவரது மனைவி கரீனா கபூர், தாய் ஷர்மிளா தாகூர் மற்றும் மகள் சாரா அலி கான் ஆகியோர் மருத்துவமனையில் அவருடன் இருந்தனர்.
சைஃப் அலிகான் டிஸ்சார்ஜ் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை, “சைஃப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், முழுமையாக குணமடையவில்லை. அவர் இன்னும் பல நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். சைஃப் நடக்கவும் பேசவும் முடியும். ஆனாலும் அவர் முழுமையாக குணமடைய ஒரு மாதம் ஆகும். குறிப்பாக அவர் குத்தப்பட்ட முதுகின் பகுதியில் கத்தியின் ஒரு பகுதி உள்ளே உடைந்துவிட்டது. அதை குணப்படுத்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குணமடைய ஒரு மாதம் ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிக எடையைத் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் ஜிம்மிற்குச் செல்லக்கூடாது எனவும், படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டாம் என்றும், முழுமையான ஓய்வு தேவை என்றும் மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், லீலாவதி மருத்துவமனையின் மருத்துவக் குழு அவரது மருந்துகளுக்கான மருந்துச் சீட்டைத் தயாரித்து வருகிறது.
ஜனவரி 16 ஆம் தேதி, வியாழக்கிழமை அதிகாலையில் ஒரு திருடனைத் தடுக்க முயன்றபோது நடிகர் சைஃப் அலி கான் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். அவருக்கு ஆறு கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. அவற்றில் இரண்டு அவரது முதுகெலும்புக்கு அருகில் இருந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வியாழக்கிழமை அதிகாலை 2:15 மணிக்கு சைஃப் அலிகான் வீட்டில் புகுந்த திருடன் அவர்களின் வீட்டு உதவியாளரைத் தாக்கிவிட்டு பின்னர் சைஃப்பையும் தாக்கினான்.
அவரது காயத்திலிருந்து 2.5 அங்குல கத்தியை மருத்துவர்கள் அகற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சைஃப் ஐசியுவுக்கு மாற்றப்பட்டார். இப்போது அவர் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த மும்பை போலீசார் தானேயில் சந்தேகத்திற்கிடமான நபரை கைது செய்தனர். தாக்குதல் நடத்திய முகமது ஷெஹ்சாத், சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஷெஹ்சாத் வங்கதேசத்தில் தேசிய அளவிலான மல்யுத்த சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

