துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
இலங்கை கடற்படையினர் ஜன்வரி 24 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள உள்ளதால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலில் “இலங்கை கடற்படையினர் ஜன்வரி 24 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படையினர் அந்நாட்டிலுள்ள காங்கேசன் துறை மற்றும் பருத்தி துறை கடற்பகுதியில் பி 475, பி 481 ஆகிய கடற்படை ரோந்து படகு/கப்பல் மூலம் ஜனவரி 24, ஜனவரி 27 ஆகிய நாட்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படை சார்பாக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மூலம் அந்நாட்டு அனைத்து மீனவ சங்கங்களுக்கும் அறிவிப்பு விடுத்துள்ளது. அதில் இந்த குறிப்பிட்ட பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் சர்வதேச எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்க வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், நாகை உள்ளிட்ட கடல் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் பின்னர் தமிழக அரசு பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஆனால் இதற்கு மட்டும் இன்னும் மத்திய அரசு தீர்வு காணாமல் திணறி வருகிறது.
கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பிரதமர் மோடி இலங்கை அதிபர் திசநயகவுடன் சந்திப்பு நடத்தினார். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அப்போது பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக கூறுகையில், “இலங்கை படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தீர்வு காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன். மீனவர்கள் பிரச்சினை இருநாடுகளுக்கும் தலைவலியாகிவிட்டது.
தமிழக மீனவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்துவதற்கு முடிவு கட்ட வேண்டும். இரட்டை மடி வலை பயன்படுத்துவது மீன்பிடித் தொழிலுக்கு பேரழிவு” எனத் தெரிவித்தார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

