Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
Australian Open 2025: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, முன்னணி வீரர்கள் ஜோகோவிச் மற்றும் ஸ்வெரேவ் அரையிறுதிக்குள் நுழைந்தனர்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இன்று நடந்த கால் இறுதிப் போட்டிகளில், பிரபல வீரர்களான ஜோகோவிச் மற்றும் ஸ்வெரேவ் ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பரபரப்பான போட்டியில் ஜெயித்த ஜோகோவிச்
இன்று(21.01.25) நடந்த கால் இறுதிப் போட்டி ஒன்றில், உலகின் 3-ம் நிலை வீரரான அல்காரஸ் மற்றும் உலகின் 7-ம் நிலை வீரரான நோவாக் ஜோகோவிச் இடையே பரபரப்பான போட்டி நடைபெற்றது. அதில், முதல் செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். இதையடுத்து, தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பிய ஜோகோவிச், அடுத்தடுத்து 3 செட்டுகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடினார். இறுதியில் 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வாகை சூடிய ஜோகோவிச் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். 3-ம் நிலை வீரரான அல்காரஸ் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், ஜோகோவிச்சுக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மற்றொரு விறுவிறுப்பான ஆட்டத்தில் வென்ற ஸ்வெரேவ்
இன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்வெரேவும், 12-ம் நிலை வீரரான பாலும் மோதினர். இந்த போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. தொடக்கம் முதலே இருவரும் விட்டுக்கொடுக்காமல் ஆடிய நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு முதல் 2 செட்டுகளை ஸ்வெரேவ் கைப்பற்றினார். ஆனால், அதற்குப்பிறகு வெகுண்டெழுந்த பால், வெறித்தனமாக ஆடி 3 வது செட்டை எளிதாக கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எனினும் சுதாரித்த ஸ்வெரேவ் 4-வது செட்டை கைப்பற்றி, 6-7, 6-7, 6-2, 1-6 என்ற கணக்கில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
நாளை(22.01.25) மேலும் இரண்டு கால் இறுதிப்போட்டிகள் நடைபெறுகின்றன. அதில், கவனிக்கப்பட வேண்டிய முக்கிய வீரரான, உலகின் முதல் நிலை வீரரான சின்னர் விளையாட உள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

