Ranji Trophy: ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கும் இந்திய நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா.?
Ranji Trophy 2025: பிசிசிஐ அறிவுறுத்தலை அடுத்து, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 6 இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் களமிறங்குகின்றனர். அவர் யார் யார் என தெரிந்துகொள்ளலாம்.

சர்வதேச போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், உள்நாட்டில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட் பேட்டிகளிலும் கட்டாயம் விளையாட வேண்டும் என, பிசிசிஐ சமீபத்தில் அறிவுறுத்தியது. இதையடுத்து, தற்போது நடைபெற்றுவரும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 6 இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் களமிறங்குகின்றனர்.
மும்பை அணிக்காக களமிறங்கும் ரோஹித் ஷர்மா
2025 சாம்பியன்ஸ் டிராஃபியில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா, அதற்கு முன்னதாக, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடுகிறார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணிக்காக அவர் களமிறங்குகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் சரியாக விளையாடாத அவர், இறுதி டெஸ்ட் போட்டியில் கேப்டன் பதவியையும் இழந்தார். இந்நிலையில், இந்த ரஞ்சிக் கோப்பை போட்டிகள், அவரை மீண்டும் ஃபார்முக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவழியாக ஓகே சொன்ன விராட் கோலி
ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் டெல்லி அணியில், ரயில்வேக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறார் விராட் கோலி. முன்னதாக நடைபெற்ற சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடம் வரை தனது பங்கற்பு குறித்து தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், கழுத்து வலி காரமாக அப்போது பங்கேற்க முடியவில்லை என டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு தெரிவித்துவிட்டார். இந்த நிலையில், அடுத்தகட்ட போட்டிகளில் ஆட அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜனவரி 30-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் அவர் பங்கேற்கிறார்.
டெல்லி அணியில் ரிஷப் பண்ட்
இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட், ரஞ்சிக்கோப்பையில் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே, சவுராஷ்டிராவுக்கு எதிராக நடந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக அவர் பங்கேற்ற நிலையில், தற்போது தொடர்ந்து விளையாடுகிறார். அதிரடியான விளையாட்டை அடிப்படையாக கொண்ட அவருக்கு, இந்த போட்டிகள் ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என நம்பலாம்.
சவுராஷ்டிரா அணியில் விளையாடும் ரவீந்திர ஜடேஜா
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கியுள்ளார். பந்துவீச்சில் 542 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அவர், 13 சதங்களுடன் 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். அவரது பங்கேற்பு, சவுராஷ்டிரா அணிக்கு பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில்
இந்தியாவின் மற்றொரு நட்சத்திர தொடக்க வீரரான சுப்மன் கில், தன்னுடைய சொந்த மாநிலமான பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார். சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடாத அவர், இந்த போட்டிகளை ஒரு சிறந்த பயிற்சியாக மாற்றிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.
மும்பை அணிக்கு பலம் சேர்க்கும் யஸஷ்வி ஜெய்ஸ்வால்
மும்பை அணியில் ஏற்கனவே ஜாம்பவான் ரோஹித் ஷர்மா இடம்பெற்றுள்ள நிலையில், அவருடன் யஸஷ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்து, மும்பை அணிக்கு பலம் சேர்க்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரு சதத்துடன் 391 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 3 அரை சதங்களும் அடங்கும். தான் சிறந்த ஃபார்மில் இருந்தாலும், முதல்தர கிரிக்கெட்டிலும் பங்கு பெற்று தனது ஃபார்மை தக்க வைத்துக்கொள்ளும் அவரது எண்ணம் பாராட்டத்தக்கது.
மொத்தத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் 6 நட்சத்திர வீரர்கள் ரஞ்சிக் கோப்பை தொடரில் பங்கேற்பதால், போட்டிகளை காண ரசிர்கள் மிகுந்த ஆர்வமடைந்துள்ளனர். ரஞ்சிக் கோப்பையில் அதிரடிகளுக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

