அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளை குத்தியதில் வீரர் பலி!
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் நவீன் குமார் என்ற வீரர், காளை குத்தியதில் உயிரிழந்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மார்பில் குத்தியதால் மாடு பிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் நவீன் குமார் என்ற வீரர் கலந்து கொண்டார். 9வது சுற்றில் களத்தில் இறங்கிய இவரை, ஜல்லிக்கட்டு காளை குத்தியது. களத்திலேயே சரிந்து விழுந்த நவீன் முதலுதவி சிகிச்சை அனுமதிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நவீன் குமார் பலியானார். இது அவரது பெற்றோர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு என்றாலே அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டே மக்களுக்கு முதலில் நினைவுக்கு வரும். மதுரை மாவட்டத்தின் இந்த 3 இடங்ளிலும் நடக்கும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றது ஆகும்.
தை முதல் நாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பது வழக்கம். இதன்படி. இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2 ஆயிரத்து 26 காளைகள், 1735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் விழாக்கமிட்டி சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது.
ஆள் மாறாட்ட குற்றச்சாட்டைத் தடுக்கும் வகையில் வீரர்களுக்கும், மாடுகளுக்கும் க்யூ ஆர் கோடு அச்சிடப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் கார், மோட்டார் சைக்கிள், தங்கச்சங்கிலி, தங்க மோதிரம், பீரோ, கட்டில் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
பார்வையாளர்கள் பாதுகாப்பு கருதி போதிய அளவு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேலரி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, மருத்துவ வசதி அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: 2026 தை திருநாளை கொண்டாடும்போது தீய சக்தி திமுகவை வேரோடு வீட்டிற்கு அனுப்புவோம் - இபிஎஸ் சூளுரை