TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்திய நிலையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறையில் தேர்வை நடத்தின.

ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு 2 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆண்டுகள் கடந்தும் டெட் எனப்படும் தகுதித் தேர்வை நடத்தாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருவதாகத் தேர்வர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
2 வகையாக தகுதித் தேர்வு
மத்திய அரசு கொண்டுவந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, கல்வியின் தரத்தை உறுதிசெய்ய ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு என்னும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டு வகைமைகளில் நடத்தப்படுகிறது. மத்திய அரசு நடத்தும் தகுதித் தேர்வு, சிடெட் ( Central Teacher Eligibility Test - CTET ) என்றும் மாநில அரசு நடத்தும் தகுதித் தேர்வு செட் (SET - State Eligibility Test ) என்றும் அழைக்கப்படுகிறது. செட் தேர்வு தமிழ்நாட்டில் டிஎன்டெட் தேர்வு (TNTET) என்றும் அழைக்கப்படுகிறது.
சிடெட் தேர்வை சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் செட் தேர்வை அந்தந்த மாநில அரசுகளும் நடத்துகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்திய நிலையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறையில் தேர்வை நடத்தின.
தள்ளி வைக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக இருந்த நிலையில் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டிய நிலையில், கடைசியாகத் தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகாலமாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
2024 ஜூலை மாதம் தேர்வு
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிக்கையில் 2024 ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எதிர்பாராத விதமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பக் காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல், தகுதித் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் தேர்வு இதுவரை நடத்தப்படவில்லை. 2024 முடிந்து 2025 தொடங்கிவிட்டது. புத்தாண்டின் முதல் மாதம் விரைவில் முடிய உள்ள நிலையில், இன்னும் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
வேதனையில் பட்டதாரிகள்
இதனால் ஆசிரியர் பயிற்சியை முடித்த பட்டதாரிகளும் பட்டயதாரிகளும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். அதேபோல பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வு முக்கியம் என்பதால், பணியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களும் கஷ்டத்தில் உள்ளனர்.
இந்த மாதத்தின் இறுதிக்குள்ளாவது,ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பையும் தேதியையும் வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

