HBD Sundar C: சிரிக்க வைக்கும் சிற்பி! தமிழ் சினிமாவின் மதகஜராஜா சுந்தர்.சிக்கு பிறந்தநாள்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுந்தர் சி.க்கு இன்று 57வது பிறந்தநாள் ஆகும். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் ஒரு சில இயக்குனர்கள் காலத்தாலும் கொண்டாடப்படுவார்கள். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய புகழ் உச்சத்தில் இருந்த இயக்குனர்கள் கூட குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு தடுமாற்றத்தைச் சந்தித்து திரைத்துறையில் இருந்து விலகிவிடுவார்கள்.
சுந்தர் சி.க்கு பிறந்தநாள்:
சுந்தர் சி 30 ஆண்டுகளாக திரைத்துறையில் வெற்றிகரமான இயக்குனராக உலா வருகிறார். இன்று அவருக்கு 57வது பிறந்த நாள் ஆகும். 1995ம் ஆண்டு முறைமாமன் என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ப்ளாக்பஸ்டர் நகைச்சுவைத் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
ஒவ்வொரு இயக்குனர்களும் தங்களுக்கென தனி டிராக்குகளை கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், மக்களின் கவலையை சிரிக்க வைக்கும் வகையில் நகைச்சுவையை கையில் எடுத்துக் கொண்டு 30 ஆண்டுகளாக ரசிகர்களைச் சிரிக்க வைத்து வருகிறார் சுந்தர் சி.
ரஜினி முதல் விஷால் வரை:
முதல் படத்திலே ஜெயராம், கவுண்டமணி, செந்தில் காம்போவில் நகைச்சுவை விருந்தை வழங்கிய சுந்தர் சி தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் தொடங்கி கார்த்திக், சரத்குமார், சத்யராஜ், அர்ஜுன், பிரபுதேவா, பிரசாந்த், மாதவன், ஆர்யா, ஜீவா, ஜெய், சிவா, சிம்பு, விஷால் என அனைத்து பிரபலங்களையும் இயக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக நீண்டகாலம் நீடிப்பது சவாலான விஷயம் ஆகும். ஆனால், தன்னுடைய திகட்டாத நகைச்சுவையால் 30 ஆண்டுகளாக இன்றும் முன்னணி இயக்குனராக சுந்தர் சி திகழ்கிறார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கி தற்போது வெளியாக மாஸ் ஹிட் அடித்துள்ள மதகஜராஜா படத்தின் வெற்றியே ஆகும்.
அன்பே சிவம்:
சுந்தர் சியை வெறுமனே நகைச்சுவை எனும் வட்டத்தில் மட்டும் சுருக்கிவிட முடியாது. அவர் அனைத்து வடிவத்திற்குள்ளும் பொருந்தும் இயக்குனர். அவரது உள்ளத்தை அள்ளித்தா முழுநீள காமெடி படமாக அமைந்த நிலையில், மேட்டுக்குடியை ஆக்ஷன் காமெடி படமாக கொடுத்து வெற்றி தந்தார்.
ரஜினிகாந்தின் ஆல் டைம் ஃபேவரைட் படங்களில் ஒன்றான அருணாச்சலம் எனும் ஆக்ஷன் குடும்பப் படத்தை இயக்கி ப்ளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தவர். நகைச்சுவை இயக்குனர் மட்டுமே என்று முத்திரை வழங்கப்பட்ட நிலையில், கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத திரைப்படமான அன்பே சிவம் படத்தை இயக்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். ஆனால், அன்பே சிவம் படம் வெற்றியடையவில்லை. அதன் பின்னர் மீண்டும் தனது நகைச்சுவை பாணிக்கே திரும்பிவிட்டார்.
நகைச்சுவை ப்ளாக்பஸ்டர்கள்:
90களில் பிறந்தவர்கள் தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப பார்த்து ரசித்த உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளைப் போகுதே, வின்னர், லண்டன், ரெண்டு என பல ப்ளாக்பஸ்டர் படங்கள் இவர் இயக்கியதே ஆகும். இவரது நகரம், கலகலப்பு, கலகலப்பு 2, அரண்மனை படங்கள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் காமெடி படங்கள் ஆகும். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தலைநகரம், அரண்மனை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மறக்க முடியாத காமெடி காட்சிகள்:
இவரது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் உருட்டுக்கட்டையுடன் வீட்டின் உள்ளே ஒருவரை ஒருவர் துரத்தி வரும் காட்சி, மேட்டுக்குடி படத்தில் வரும் கவுண்டமணி கார்த்திக் காமெடி காட்சிகள், வின்னர் படத்தில் வரும் வடிவேலுவின் அனைத்து காமெடி காட்சிகள், கிரி படத்தில் வரும் வீரபாகு காமெடிகள், லண்டன் படத்தில் வரும் வடிவேலு காட்சிகள், ரெண்டு படத்தில் மாதவன் - வடிவேலு காம்போ காட்சிகள், நகரம் மறுபக்கம் படத்தில் வரும் வடிவேலுவின் ஸ்டைல் பாண்டி காட்சிகள், கலகலப்பு படத்தில் வரும் சந்தானத்தின் வாத்தியார் நகைச்சுவை காட்சிகள், அரண்மனை படத்தில் சந்தானத்தின் பால்சாமி காமெடி காட்சிகள் எப்போது பார்த்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தும்.
தமிழ் சினிமாவின் பொக்கிஷம்:
மதகஜராஜா வெற்றி விழாவில் இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இத்தனை வெற்றிப்படங்களை கொடுத்தாலும், தான் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இல்லாமல் இருப்பதாக சுந்தர் சி வேதனைப்பட்டிருந்தாலும், காலத்திற்கும் அழியாத வகையில் ரசிகர்களின் மனக்கவலையை மறக்க வைத்த அவரது திரைப்படங்களே அவர் தமிழ் சினிமாவின் எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பதை உணர்த்தும்.

