U19 WT20: இந்தியானா கெத்து! 31 ரன்னில் சுருண்ட மலேசியா! மூணே ஓவரில் ஆட்டத்தை முடித்த த்ரிஷா!
மலேசியாவில் நடக்கும் மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான T20 உலகக்கோப்பையில் இந்திய அணி மலேசிய அணியை 31 ரன்னில் சுருட்டி அசத்தியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை மலேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என பல அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி இன்று மலேசியாவுடன் மோதியது.
சுழலில் மிரட்டிய இந்தியா:
கோலாலம்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மலேசிய அணியை இந்திய அணியினர் தங்களது பந்துவீச்சால் சிதைத்தனர். ஆட்டத்தைத் தொடங்கிய மலேசிய வீராங்கனையின் நுனி ஃபாரினி டக் அவுட்டாகினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மலேசியா அணி.
குறிப்பாக, ஆயுஷி சுக்லா மற்றும் வைஷ்ணவி ஷர்மா மலேசிய அணியை தங்கள் மாயாஜால சுழலில் கட்டிப்போட்டனர். இதனால், அவர்களின் பந்துவீச்சில் மாயவலையில் சிக்கியதுபோல சிக்கிக் கொண்ட மலேசிய அணி ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறியது.
31 ரன்களுக்கு ஆல் அவுட்:
ஓவருக்கு ஓவர் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்ததால் மலேசிய அணியால் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. இதனால், 14.3 ஓவர்களில் வெறும் 31 ரன்களுக்கு மலேசிய மகளிர் அணி ஆல் அவுட்டாகினர். இதில் இந்திய அணியின் சார்பில் வைஷ்ணவி சர்மா 4 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஒரு ஓவர் மெய்டன் ஆகும். ஆயுஷி சுக்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மலேசியா அணி எடுத்த 31 ரன்களில் 11 ரன்கள் இந்திய அணி வழங்கிய எக்ஸ்ட்ரா ரன்கள் ஆகும். அதாவது, இந்திய அணி 10 ஒயிட் மற்றும் 1 நோ பால் வீசியதன் மூலம் கிடைத்தது. மலேசிய அணி எடுத்தது வெறும் 20 ரன்கள் மட்டுமே ஆகும். இந்த போட்டியில் மலேசிய அணிக்காக நுர் அலியா ஹைரூன் மட்டுமே ஒரு பவுண்டரி அடித்தார். அதிகபட்சமக நுர் அன் ரோஸ்லான் 18 பந்துகளை எதிர்கொண்டார். அதிகபட்சமாக நுர் அலியா மற்றும் ஹஸ்னா தலா 5 ரன்களை எடுத்தனர்.
3 ஓவரிலே இந்தியா வெற்றி:
32 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்காக கோங்கடி த்ரிஷா பவுண்டரிகளாக விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். த்ரிஷா - தமிழக வீராங்கனை கமாலினி ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் இணைந்து 2.5 ஓவர்களில் 32 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். த்ரிஷா 12 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்தார். கமாலினி 5 பந்தில் 1 பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்தார்.
குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் 31 ரன்களில் மலேசிய அணியை சுருட்டி வெற்றி பெற்றிருப்பது மற்ற அணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 44 ரன்களில் சுருட்டியது. அந்த போட்டியிலும் 5வது ஓவரிலே இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
வலுவான பந்துவீச்சு மூலமாக எதிரணிகளுக்கு இந்திய அணி சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதன் மூலமாக இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.



















