ஒத்திவைக்கப்பட்ட UGC நெட் தேர்வு.. மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதியை அறிவித்த NTA
UGC NET Exams: நாளை நடைபெறவிருந்த யு.ஜி.சி. நெட் தேர்வுகள், அதற்கு பதிலாக வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வுகள், வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நெட் தேர்வுகள்:
மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்ற ’GC-National Eligibility Test (NET)' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) இந்தத் தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும். நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. குறிப்பாக ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் கணினி வழியில் நடத்தப்படும். டிசம்பர் மாத தேர்வுகள் ஜனவரியில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் நடத்த என்.டி. எ. திட்டமிட்டுருந்தது.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் பொங்கல் திருநாள் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி - நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தேர்வு நடைபெறும் தேதியை மாற்றியமைக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடிதம் எழுதினார்.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது?
இந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த யு.ஜி.சி. நெட் தேர்வுகள், அதற்கு பதிலாக வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பொங்கல் விழா ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, போகி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், 14ஆம் தேதியான இன்று பொங்கல் (தமிழ்ப் புத்தாண்டு) பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து, ஜனவரி 15ஆம் தேதியான (நாளை) திருவள்ளுவர் தினமாகவும் (மாட்டுப் பொங்கல்) ஜனவரி 16 ஆம் தேதி உழவர் திருநாள் / காணும் பொங்கலாகவும் கொண்டாடப்பட உள்ளது.
இதையும் படிக்க: Maha kumbh mela 2025 : 2 லட்சம் கோடி வருவாய்? 40 கோடி மக்கள்! மகா கும்ப மேளா ரிப்போர்ட்!