IND Vs ENG T20: 14 ஆண்டுகால சாதனை தொடருமா? இந்தியா Vs இங்கிலாந்து, தோனியால் முடியல? ஸ்கை சாதிப்பாரா?
IND Vs ENG T20: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட, டி20 தொடர் நாளை தொடங்குகிறது.

IND Vs ENG T20: இந்தியாவில் 14 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி, டி20 தொடரை வென்றதில்லை என்ற சாதனையை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா Vs இங்கிலாந்து டி20 தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மூத்த வீரர்கள் இல்லாத, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 14 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி, டி20 தொடரை வென்றதில்லை என்ற சாதனையை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தக்கவைப்பாரா? அல்லது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோசமான சாதனைகளை படைத்து வரும் இந்திய அணி இங்கிலாந்து தொடரிலும் சறுக்குமா? என்ற அச்சம் நிலவுகிறது.
14 ஆண்டுகால சாதனை தொடருமா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி, நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு இரு அணிகளும் தயாராக உள்ளன. இரு அணிகளும் இதுவரை மோதிய சர்வதேச போட்டிகளில் இந்தியா 54 சதவிகிதமும், இங்கிலாந்து 46 சதவிகிதமும் வெற்றி விகிதத்தை கொண்டிருக்கின்றன. அதேநேரம், இந்திய அணி கடந்த 14 ஆண்டுகளாக இந்தியாவில் டி20 தொடரை வென்றதே இல்லை என்ற மோசமான சாதனையையும் கொண்டுள்ளது. கடைசியாக 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலந்து அணியிடம் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து கேப்டனான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே, இந்திய மண்ணில் இங்கிலாந்திற்கு எதிராக டி20 தொடரை இழந்ததே இல்லை. அந்த வெற்றிப் பயணத்தை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்தியா Vs இங்கிலாந்து - நேருக்கு நேர்
2007 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி நடைபெற்றது. அதைதொடர்ந்து தற்போது வரை இரு அணிகளுக்கு இடையே 24 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் இந்தியா 13 போட்டிகளிலும், இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இந்தியாவில் 11 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் இந்தியா 6 ஆட்டங்களிலும், இங்கிலாந்து 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஐசிசி டி-20 உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 5 போட்டிகள் நடந்துள்ளன. அதில் இந்தியா 3, இங்கிலாந்து 2 வெற்றிகளை பெற்றுள்ளன.
தொடர்ந்து 4 தொடரில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2011-ம் ஆண்டு முதல் டி-20 தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியடைந்தது. தொடர்ந்து 2014-ம் ஆண்டு வரை இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 4 தொடர்கள் நடந்தது. அதில் ஒன்றுடிரா ஆக, மற்ற மூன்றில் இந்தியா தோல்வியடைந்தது. 2017 முதல் 2022 வரை இரு அணிகளும் மேலும் 4 தொடர்களில் விளையாடியுள்ளன. இந்த நான்கிலும் இந்தியா மட்டுமே வெற்றி பெற்றது.
தோல்வி கண்ட தோனி:
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்கு 3 வீரர்கள் கேப்டனாக இருந்தனர். அதன்படி, தோனியின் தலைமையில் 2011 முதல் 2014 வரை இங்கிலாந்திற்கு எதிராக 4 தொடர்களில் விளையாடிய அணி, மூன்றில் தோல்வியடைந்தது, ஒன்று டிரா ஆனது. 2017 முதல் 2021 வரை கோலியின் தலைமையின் கீழ் விளையாடிய, மூன்று தொடர்களையும் இந்தியா வென்றது. 2022ல் ரோகித் தலைமையில் இந்தியா விளையாடிய கடைசி தொடரையும் கைப்பற்றியது.
வீரர்களின் புள்ளி விவரங்கள்:
- இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த இங்கிலாந்து வீரர் - ஜோஸ் பட்லர் (498 ரன்கள்)
- இங்கிலாந்திற்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர் - விராட் கோலி (648 ரன்கள்)
- இந்தியாவிற்கு எதிராக அதிக விக்கெட்டுகள் இங்கிலாந்து வீரர் - ஜோர்டன் (24 விக்கெட்டுகள்)
- இங்கிலாந்திற்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் - சாஹல் (16 விக்கெட்டுகள்)




















