Valentine's Day special | ‛மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ...’ இது செல்லூர் ராஜூவின் கேரள காதல் கதை!
நான் போகும் போதெல்லாம் ஒரு நூல் விட்டார் என் மனைவி. அந்த சமிக்ஞை வைத்து தான், நான் காதலிக்க ஆரம்பித்தேன்.
கடந்த ஆட்சியில் கலகலப்பாக இருந்தவர், கலகலப்பாக ஆக்கியவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. சில செயல்பாடுகளால் அவர் விமர்சிக்கப்பட்டாலும், மீம்ஸ்களுக்குள் வந்தாலும், அவரது குடும்ப வாழ்க்கை மிக ரம்யமானது. காதல் திருமணம் செய்து கொண்ட அவர், தனது காதல் கை கூடியதை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் மூலம் தெரிய முடிந்தது. காதலர் தினமான இன்று இதோ முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய அந்த காதல் கதை...
என் வாழ்க்கையில் எல்லாமாய், என் இன்பம், துன்பத்தில் பங்கெடுப்பவர் என் மனைவி. ஆண்டு தோறும் டூர் போவது வழக்கம். திருவனந்தபுரம் போகும் போது, எனது சீனியர் நண்பர் ஜெயசீலனுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது என் மனைவி ஜெயந்தி வீட்டிற்கு போவேன். அப்போது அவரை எனக்கு பிடித்திருந்தது.
இதற்கிடையில் என் வீட்டார், எனக்கு பெண் பார்க்கத் தொடங்கினர். என் அம்மாவிடம், விசயத்தை கூறினேன். ‛ஜெயசீலன் தங்கை ஜெயந்தியை எனக்கு பிடித்திருக்கும்... அவங்களை பேசி முடிக்கலாம்,’ என்று என் விருப்பத்தை தெரிவித்தேன். சரி பார்க்கலாம் என்று வீட்டில் பச்சை கொடி காட்டினார்கள்.
அப்போது செல்போன் இல்லை. கடிதம் வழியாக, என் நண்பன் ஜெயசீலனுக்கு கடிதம் அனுப்பினேன். திருமணம் தொடர்பாக சம்மதத்தை கேட்டு அனுப்பினேன். அவர், அவரது தந்தையிடம் விவரத்தை கூறி, அவரின் சம்மந்தத்தை பெற்று, அதன் பின் அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதன் பின், அவர்கள் வீட்டார் இங்கு வந்து, என்னைப் பற்றி விசாரித்தார்கள். நான் போகும் போதெல்லாம் ஒரு நூல் விட்டார் என் மனைவி. அந்த சமிக்ஞை வைத்து தான், நான் காதலிக்க ஆரம்பித்தேன். காதலில் தொடங்கி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக என் திருமணம் நடந்து முடிந்தது. நான் தலைவர் ரசிகர் என்பதால், அவருடன் நடித்த கதாநாயகிககள் ஆடைகளை நன்கு கவனிப்பேன். என் குடும்பத்தாருக்கு ட்ரெஸ் எடுக்கும் போதும், அன்றைய ட்ரெண்ட் பார்த்து தான் ஆடை எடுப்பேன். என் மனைவிக்கு தேவையான ஆடை, நைட்டி முதற்கொண்டு நான் தான் எடுப்பேன். அன்றிலிருந்து இன்று வரை அவருக்கு தேவையானதை வாங்கித் தருவதில் இருந்து எங்களது காதல் இருக்கிறது, ’’ என்றார்.
செல்லூர் ராஜூ மனைவி ஜெயந்தி பேசும் போது,
‛‛நாங்க மிடில் கிளாஸ் குடும்பம். என் அண்ணன் ப்ரெண்ட்னு சொல்றாங்க, நல்லவரா தான் இருப்பார்னு தோணுச்சு. ஆனால் அவரை கல்யாணம் பண்ணனும் எனக்கும் எண்ணம் இருந்தது. என் அண்ணன் அவரைப் பற்றி பெருமையா சொல்வாரு. என் அண்ணன் சொன்னது தான் எனக்கு அவர் மீது விருப்பம் வர காரணம் ஆனது. சமையல் செய்து, உப்மா கூட பண்ணக்கூடாது. எனக்கு எதுவுமே தெரியாத என்னை என் மாமியார் தான் என்னை செதுக்கினார். அதன் பின் என் சமையலை தான், என் மாமியார் விரும்பி சாப்பிட ஆரம்பித்தார்,’’ என்று ஜெயந்தி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்