மேலும் அறிய

CM M.K. Stalin: இருப்பது ஸ்பெய்னில் என்றாலும் நினைப்பெல்லாம் தமிழ்நாடுதான் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

CM M.K. Stalin: ஸ்பெயின் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு மக்களுக்கும் திமுகவினருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27ஆம் தேதி அரசுமுறை பயணமாக ஸ்பெயினுக்கு புறப்பட்டார். அரசுமுறை பயணத்தில் ஈடுபட்டுள்ள அவர், தமிழ்நாடு மக்களுக்கும் திமுகவினருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், 

”அயல்நாட்டில் இருந்தாலும் நினைவு முழுவதும் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்களே நிறைந்திருக்கிறீர்கள். இந்த மடலை நான் எழுதும்போது, உடன்பிறப்புகளாம் உங்ளுக்கு இப்போது நேரம் மதியம் 12 மணி. உங்களில் ஒருவனான எனக்கு காலை 7.30 மணி. ஆம்.. இந்தியாவிலிருந்து நாலரை மணி நேர வேறுபாடு கொண்ட ஐரோப்பாவின் ஸ்பெய்ன் நாட்டில் இருக்கிறேன், தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக!

ஜனவரி 27-ஆம் நாள் சென்னையிலிருந்து ஸ்பெய்ன் நாட்டிற்கு புறப்படும் நிலையில், ஊடகத்தினரிடம் பேசும்போது, “தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பெருக்கி, 1 டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்கை அடைவதற்கு கடந்த ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றேன். இந்த ஆண்டு ஸ்பெய்ன் நாட்டிற்குச் செல்கிறேன்” என்று தெரிவித்தேன். அதுமட்டுமல்ல, சிங்கப்பூர் - ஜப்பான் பயணத்தின் விளைவாக கிடைத்துள்ள முதலீடுகள், தொடங்கவுள்ள தொழில்கள், கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் இவற்றையும், ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றியையும் சுட்டிக்காட்டினேன்.

இதோ, இங்கே ஸ்பெய்ன் நாட்டிலும் தமிழ்நாட்டிற்கானத் தொழில் முதலீடுகளை ஈர்க்கின்ற வகையிலான சந்திப்புகளும், அதன் தொடர்ச்சியாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பயணத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன. இருப்பது ஸ்பெய்னில் என்றாலும், நினைப்பெல்லாம் தமிழ்நாட்டில்தான்.

நம் தமிழ்நாட்டைப் போலவே மொழியையும் பண்பாட்டையும் இரு கண்களாகக் கருதி, உயிரெனப் போற்றக்கூடியவர்களாக ஸ்பெய்ன் நாட்டு மக்கள் இருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமை மிக்க ஸ்பெய்ன் நாட்டுக் கட்டடங்கள், தமிழ்நாட்டின் புகழ்மிக்க கலைப் படைப்புகளை நெஞ்சில் நிழலாடச் செய்கின்றன. நம்முடைய தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் ஏறுதழுவுதல் போல ஸ்பெய்ன் நாட்டிலும் எருது ஓடும் போட்டி உண்டு. நம் உயிருக்கு நேரான தமிழ்மொழி போல, அந்நாட்டு மக்களும் தங்களுடைய தாய்மொழியான ஸ்பானிஷ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டிருக்கிறார்கள். உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தை ஸ்பானிஷ் பெற்றிருக்கிறது. ஸ்பெய்னில் எல்லா இடங்களிலும் ஸ்பானிஷ் மொழியே முதன்மை பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டிற்குச் சென்றபோதும் அங்கே அவர்களின் தாய்மொழியே முதன்மை பெற்றிருப்பதைக் கண்டேன். ஆதிக்க மொழிகளுக்கு இடம் தராமல், உலகத் தொடர்புக்கேற்ற அளவில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் நிலையை இருநாடுகளிலும் கண்டபோது, நம் மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன் - நம் உயிருக்கும் மேலான இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குப் பார்வையிலான இருமொழிக் கொள்கை நினைவுக்கு வந்தது. அந்த அண்ணனுக்கு பிப்ரவரி 3 அன்று நினைவு நாள்.

வங்கக் கடலோரம் தன் கழகத் தம்பியாம் கலைஞருடன் நிரந்தரத் துயில் கொள்ளும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாளன்று அமைதிப் பேரணி நடத்தி, மலர் தூவி மரியாதை செலுத்துவது கழகத்தின் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான வழக்கமாக உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த அந்த நடைமுறை வெறும் சம்பிரதாயச் சடங்கல்ல. “எங்கள் அண்ணனே.. நீ தொடங்கிய இயக்கம் எந்த இலட்சியத்திற்காக உருவானதோ, அந்த இலக்கை அடையும் வகையில் எங்கள் வெற்றிப் பயணம் தொடர்கிறது” என்று மனதில் சூளுரை ஏற்று, அதற்கேற்ற வகையில் இயக்கத்தை வழிநடத்திடும் வலிமையைப் பெறுவதற்கான வாய்ப்பு.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் தலைமையில், இனமானப் பேராசிரியர் முன்னிலையில் அண்ணா சதுக்கம் நோக்கி எத்தனையோ அமைதிப் பேரணிகளில் நடந்து சென்றது என் நினைவுக்கு வருகிறது. இந்த முறை, கழக உடன்பிறப்புகளாம் உங்களுடன் வருவதற்கான சூழல் அமையவில்லை. எனினும், எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார்.

உலக நாடுகளின் வரலாற்றை கழகப் பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தன் தம்பியருக்கு எடுத்துரைத்து அரசியல் தெளிவு தந்த அறிவுலக மேதை அவர். கழகத்தின் பொதுக்கூட்டங்களை மாலை நேரக் கல்லூரிகளாக்கி, உலக வரலாறுகள் பற்றிய வகுப்பெடுத்தவர்கள் நம் அண்ணாவும் அவர்தம் அன்புத் தம்பியரும்.

அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே  முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதல் முழக்கம். அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கிற்கு முடிவுகட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம். மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் பேசுவதை, விரும்பிய தொழிலைச் செய்வதை, விரும்பிய உடையை உடுத்துவதை, விரும்பிய உணவை உண்பதை, விரும்பிய அரசைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதற்கும், இவற்றுக்கு அடிப்படையான மாநில உரிமைகளை கட்டிக்காப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, தேர்தல் களப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி மிகுந்த உற்சாகத்தோடு அதனை முன்னெடுத்துச் செல்கிறது கழகம்.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த 19-ஆம் தேதி, கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு என மூன்று குழுக்கள் அறிவிக்கப்பட்டு அந்தக் குழுக்கள் தங்கள் பணிகளை உடனடியாகத் தொடங்கிவிட்டன. ஜனவரி 21-ஆம் நாள் சேலத்தில் எழுச்சிமிகு உணர்ச்சி மாநாடாக நடைபெற்ற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடும் மாநில உரிமை மீட்பு முழுக்கத்தை முன்வைத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. 

தோழமைக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகப் பொருளார் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் காங்கிரஸ் பேரியக்கத்துடன் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நிறைவு செய்து, மற்ற தோழமைக் கட்சியினருடன் ஆலோசனையில் உள்ளனர். தோழமை உணர்வை மதித்தும், நாட்டின் நிலைமையை உணர்ந்தும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவது குறித்த செய்திகள் எனக்கு எட்டியபடி உள்ளன.

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்பதுதான் கழகத்தின் தேர்தல் வாக்குறுதி. அக்கவுண்ட்டில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றோ, ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றோ, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவோம் என்றோ வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றுகின்ற பா.ஜ.க போலவோ அதன் கள்ளக்கூட்டணியான அ.தி.முக. போல தி.மு.க.வின் நாடாளுமனறத் தேர்தல் வாக்குறுதிகள் இருக்காது என்பதால், தங்கை கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று பலதரப்பு மக்களையும் அமைப்புகளையும் சந்தித்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற பொறுப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை  நேரிலும், கடிதத்திலும், மின்னஞ்சலிலும், QR Code வாயிலாகவும் வழங்கி வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் கழகத்தின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவினர், அண்ணா அறிவாலயத்தில், நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்துத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

தினமும் 4 தொகுதிகள் வீதம் இதுவரை 22 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒவ்வொன்றும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டமாக மட்டுமில்லாமல் கழகத்தினர் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் கூட்டமாகவும் இருப்பது கழக நிர்வாகிகளை மிகுந்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்பதை அறிகிறேன்.

இந்தியாவின் குடியரசு நாளான ஜனவரி 26 அன்று, திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி. முன்னெடுத்து நடத்திய “வெல்லும் சனநாயகம்” மாநாட்டில் நான் குறிப்பிட்டதுபோல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம்தான். அதிமுகவை வைத்து பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் கழக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி. பா.ஜ.க.வுக்கு எதிரான வெற்றிக் கூட்டணி எப்படி அமையவேண்டும் என்பதை கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைத்த கூட்டணி வாயிலாக நிரூபித்துக் காட்டின திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி உறுதியாகக் களம் கண்டு, வெற்றி பெற்றதன் விளைவாக திராவிட மாடல் அரசு அமைந்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக ஆட்சியை வழங்கி வருகிறது. இதுதானே அண்ணாவின் இலட்சியம். இதுதானே தலைவர் கலைஞரின் செயல்திட்டம்.

மக்களிடம் செல் என்றார் பேரறிஞர் அண்ணா. உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், ‘மக்களிடம் செல். மக்களிடம் சொல்’ என்று ஒவ்வொரு உடன்பிறப்பையும் கேட்டுக்கொள்கிறேன். இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு குடும்பமும் கழக ஆட்சியின் சாதனைகளால் பெற்றிருக்கும் பயன்களை உணர்த்துங்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவுபடுத்துங்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் கூடுதலான உழைப்பை வழங்கி, கூடுதலான வாக்கு வித்தியாசத்தில், கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள். அந்த இலக்கை  திமுக நிச்சயம் அடைந்துவிடும் என்கிற நம்பிக்கை அண்ணா அறிவாலயத்தில் கழக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடனான சந்திப்பின்போது நிர்வாகிகள் காட்டும் உற்சாகத்திலேயே நன்கு புலப்படுகிறது. அந்த உற்சாகம், தேர்தல் களப்பணிகளிலும் குன்றாமல் குறையாமல் வெளிப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் சளைத்தவையல்ல. பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே ஒன்றிய பா.ஜ.க அரசின் பத்தாண்டுகால சாதனையாக இருப்பதால் தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும். எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் தி.மு.க என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவர்களுக்குப் புரிய வைப்போம்.

நாடாளுமன்றத்தில் இடைக்காலப் பட்ஜெட்டை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதிலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளது. முழுமையான பட்ஜெட்டை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதற்கேற்ற வகையில் வெற்றி பெறுவோம் என பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு நாளில் சூளுரைப்போம்.

அமைதிப் பேரணியில் அன்பு உடன்பிறப்புகள் அலைஅலையாய் வங்கக்கடல் நோக்கிச் செல்கின்ற நேரத்தில், இங்கே அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி உங்களில் ஒருவனான நானும் சூளுரை ஏற்கிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம்!  ஆதிக்க ஒன்றிய அரசை அகற்றியே தீருவோம்!” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
MK Stalin Photo : ’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
EPS on Vijay: “திமுகவை வீழ்த்த விஜய் அதிமுக உடன் இணைவார்“ - எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
“திமுகவை வீழ்த்த விஜய் அதிமுக உடன் இணைவார்“ - எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 24-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில ஜூலை 24-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
MK Stalin Photo : ’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
EPS on Vijay: “திமுகவை வீழ்த்த விஜய் அதிமுக உடன் இணைவார்“ - எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
“திமுகவை வீழ்த்த விஜய் அதிமுக உடன் இணைவார்“ - எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 24-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில ஜூலை 24-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
EPS Vs DMK: “திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
'மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ’  யாருடன் உரையாடினார் பாருங்கள்..!
'மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ’ யாருடன் உரையாடினார் பாருங்கள்..!
நீட் கலந்தாய்வு; மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களா? இதை கட்டாயம் படிங்க!
நீட் கலந்தாய்வு; மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களா? இதை கட்டாயம் படிங்க!
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? பெட்டிகளில் இருந்த தாள்கள் என்ன? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? பெட்டிகளில் இருந்த தாள்கள் என்ன? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.