"நிர்மலா சீதாராமன் போல வடை சுடுவதை பார்க்கவே முடியாது" - தயாநிதி மாறன் கடும் விமர்சனம்
நிர்மலா சீதாராமனைப் போல வடை சுடுவதை பார்க்கவே முடியாது தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ம் தேதி நாட்டின் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்தது. குறிப்பாக, பட்ஜெட்டில் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான தமிழ்நாட்டின் பெயர் உச்சரிக்கப்படவே இல்லை. இது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வடை சுடும் நிர்மலா:
இந்த நிலையில், இன்று மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதியளவு நிதி ஒதுக்காததை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பங்கேற்றார். அவரிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் குறிப்பிட வேண்டியது முக்கியம் இல்லை என்று கூறியதையும், மாநிலங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கியதாகவும் கூறியதையும் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது,” பா.ஜ.க. அரசு மைனாரிட்டி அரசு. அவர்கள் வடை சுடுவாங்க. அழகா வடை சுடுவாங்க. அதுவும் நிர்மலா அம்மா போல வடை சுடுவதை பார்க்கவே முடியாது. அப்புறம் ஏன் இந்த இரண்டு பெயர்( ஆந்திரா, பீகார்) மட்டும் சொன்னீர்கள்? அவர்கள் இரண்டு பெயர் மட்டும் வெண்ணெய்யா?
ரோட் ஷோ பிரதமர்:
அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள். சொன்னால் அனைவரது பெயரையும் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் எங்கள் முதலமைச்சர் 37 ஆயிரம் கோடி வெள்ள நிவாரண நிதியாக கேட்டோம். சென்னையில், தூத்துக்குடியில் வெள்ளம் வந்தது. அவர்கள கொடுத்தது 257 கோடி ரூபாய்தான். அதுவும் நமது காசு. அவர்கள் காசு ஒரு ரூபாய் கூட தரவில்லை.
மெட்ரோ திட்டத்திற்கு கொடுத்திருக்கலாம். ஒரு ரூபாய் கூட தரவில்லை. பிரதமர் மோடி ரோட் ஷோ போனாரே? மேற்கு மாம்பலத்தில் ரோட் ஷோ போனாரே? என்ன செய்தார்கள்? குடிசைகளை பார்க்க கூடாது என்று மூடி மறைத்தனர். கோவையில் ரோட் ஷோ போனாரா? மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் தந்தனரா? வெறும் ரோட் ஷோ பிரதமர்தான் அவர். தமிழ்நாட்டு மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள். மறக்க மாட்டார்கள். தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.”
இவ்வாறு அவர் கூறினார்.