ADMK BJP Alliance: டெல்லியில் எடுபடுமா எடப்பாடி பழனிசாமி வாய்ஸ்? யூகங்களுக்கு மத்தியில் நாளை தலைநகருக்கு பயணம்..
ADMK BJP Alliance: பாஜக தலையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.
ADMK BJP Alliance: 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக இருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் திரளும் வேலையை ஏற்கனவே தொடங்கி விட்டநிலையில், பாஜக ஏற்கனவே 2019ஆம் ஆண்டு தனது கூட்டணியில் இருந்த கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு இம்முறையும் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை அதாவது ஜூலை 18ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள பாஜக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்கனவே அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாமக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று, அதாவது ஜூலை 16ஆம் தேதி அதிமுக உயர்மட்டக் குழுவுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணி என்றாலும், தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுததான் தலைமை வகிக்கவேண்டும் எனவும், அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் எனவும், தொகுதி பங்கீட்டில் மிகவும் கறாராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓபிஎஸ்-உடன் தேர்தலுக்காக பேச்சு வார்த்தை கூட நடத்தப்படக்கூடாது என பாஜக தலைமையிடம் கூறவேண்டும் எனவும் சிலர் அழுத்தம் திருத்தமாக கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். இவருடன் வேறு யாரெல்லாம் பங்குபெற போகிறார்கள் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேநேரத்தில் இன்று அதாவது ஜூலை 17ஆம் தேதி நடைபெற்று வரும் அமலாக்கத்துறை ரெய்டு குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு ரகசிய தகவல் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னணியில் அவரை பாஜகவில் இணைக்கத்தான் சோதனை நடைபெற்றதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடும் நிலையில், தற்போது நடைபெற்றுள்ள ரெய்டு, இதன் பின்னர் நடக்கவுள்ள ரெய்டுக்கான காரணம் திமுகவை தேர்தல் களத்தில் முற்றிலும் முடக்கவே இவ்வாறு நடப்பதாகவும் அதனை காரணம் காட்டி பாஜக 20 தொகுதிகள் அதிமுகவிடம் பேரம் பேச தயாராக இருப்பதாகவும் என்பதுதான் அந்த தகவல்.
இந்த நிலையில் தான் நாளை நடக்கவுள்ள பாஜக தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார். மேலும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே. வாசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.