Mumbai IIT: ஆமா, 11th ஃபெயிலு.. விடாமுயற்சியால் ஐஐடியில் இடம், பானி பூரி விற்பவரின் மகன் சாதித்தது எப்படி?
Mumbai IIT: பள்ளி படிப்பில் 11ம் வகுப்பில் தோல்வியுற்ற மும்பையைச் சேர்ந்த ஹர்ஷ் குப்தா என்ற மாணவன், ரூர்கி ஐஐடியில் இடம்பிடித்தது சாதித்துள்ளார்.

Mumbai IIT: பள்ளி படிப்பில் 11ம் வகுப்பில் தோல்வியுற்றபோதும் குடும்பத்தின் ஆதராவாலேயே. ஜேஇஇ தேர்வில் சாதிக்க முடிந்ததாக மாணவன் ஹர்ஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
ரூர்கி ஐஐடியில் இடம்:
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயதான ஹர்ஷ் குப்தா, விடாமுயற்சியால் மிகவும் இருண்ட அத்தியாயங்களைக் கூட மீண்டும் ஒளி நிறைந்ததாய் மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளார். பள்ளி படிப்பில் 11 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த பிறகு, அவர் முடங்கிப்போகாமல் நம்பிக்கையையும், முயற்சியையும் தனக்கு துணையாக்கியுள்ளார். விடாப்பிடியான உறுதியுடனும், தனது குடும்பத்தினரின் ஆதரவுடனும், அவர் மீண்டும் தேர்வுகளை எழுதி, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) தனக்கான ஒரு இடத்தை உறுதி செய்துள்ளார்.
பானி பூரி விற்பவரின் மகன்:
மும்பை பெருநகரப் பகுதியை ஒட்டிய நகரங்களில் ஒன்றான கல்யாணைச் சேர்ந்த ஹர்ஷ் குப்தா, அங்கு சாலையோரம் ஒரு சாதாரண பானி பூரி கடையை நடத்தி வரும் சந்தோஷ் குப்தாவின் மகனாவார். நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், அந்த இளம் மாணவர் ஒரு பெரிய கனவை நோக்கி தனது பயணத்தை தீர்க்கமாக முன்னெடுத்தார். பொறியியல் ஆர்வலர்களை உருவாக்குவதற்குப் பெயர் பெற்ற நகரமான ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்ந்தார். இறுதியில் உத்தராகண்டில் உள்ள ஐஐடி ரூர்க்கியில் அட்மிஷன் பெற்றுள்ளார்.
எதிர்கால இலக்கு என்ன?
பொது நிர்வாகம் மூலம் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன், சிவில் சேவைகளில் சேர விரும்புவதாக ஹர்ஷ் குப்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால், அவரது பயணம் சுமூகமாக அமைந்துவிடவில்லை. அவர் JEE-மெயின்ஸில் 98.59 சதவீத மதிப்பெண்களைப் பெற்று, இந்தியாவின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பொறியியல் நுழைவுத் தேர்வான JEE-Advanced தேர்வில் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், அவர் ஆரம்பத்தில் விரும்பிய IIT வளாகத்தில் சேரத் தவறிவிட்டார். இதனால் சோர்வடைந்துவிடாமல், மீண்டும் தேர்வினை எழுதி, இரண்டாவது முயற்சியிலேயே தனக்கான இடத்தைப் பிடித்தார்.
விமர்சனங்களை காதில் வாங்காதா ஹர்ஷ் குப்தா
11ம் வகுப்பில் தோல்வியுற்றபோது சக மாணவர்கள் கடுமையாக விமர்சித்ததாகவும், திறன் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியதாகவும், பானிபூரி விற்பவரின் மகனால் ஐஐடிக்குள் நுழைய முடியாது என்றெல்லாம் பேசியதாகவும் ஹர்ஷ் குப்தா வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், அந்த எதிர்மறையான பேச்சுகளை நான் மனதிற்குள் எடுத்துச் செல்லாமல், கல்வி மீது கவனம் செலுத்தினேன். நாள் ஒன்றிற்கு 10 முதல் 12 மணி நேரம் படித்தேன் என ஹர்ஷ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோரின் ஆதரவு
மேலும், "11 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த பிறகு, நான் கோட்டாவுக்குச் செல்ல முடிவு செய்தேன். என் முடிவிற்கு எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்தனர். ஐஐடியில் தேர்ச்சி பெற்று மும்பை ஐஐடி அல்லது ரூர்க்கியில் இடம் பெற வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டேன்” என ஹர்ஷ் தெரிவித்துள்ளார். தோல்வியால் துவண்டு விடாமல் அதிலிருந்து மீண்டு வந்து முயற்சி செய்வதற்கு எனது தந்தையின் ஊக்குவிப்பே காரணம்” என ஹர்ஷ் பெருமையுடன் பேசியுள்ளார். அதன்படி, ”என்னால் படிக்க முடியவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் கனவுகளைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஹர்ஷ் குப்தா பெருமிதம்:
நான் 11 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தாலும் நான் ஒருபோதும் எனது முயற்சியை கைவிடவில்லை. என் குடும்பத்திலும், என் பள்ளியிலும் நான்தான் முதல் ஐஐடி மாணவர். தனது அனுபவத்தில் கற்றதாக, “தோல்விகளை நீங்கள் யார் என்பதை வரையறுக்க அனுமதிக்காதீர்கள். ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள்” என ஹர்ஷ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.மேலும்," என மகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார்.
பெற்றோரின் ஆதரவு ஏன் அவசியம்?
கல்யாணில் உள்ள ஒரு சிறிய உணவுக் கடையிலிருந்து ஐஐடி ரூர்க்கியின் வகுப்பறை வரையிலான குப்தாவின் பயணம், பின்னடைவுகள் ஒருவரின் விதியை தீர்மானிக்க வேண்டியதில்லை. விடாமுயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாக நிற்கிறது. முன்னதாக, நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக இதே மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 17 வயது பெண்ணை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் கடந்த மாதம் அரங்கேறியது. ஆனால், தோல்விகளின் போது வெறுப்பை கொட்டாமல், பெற்றோர் சரியான வழிகாட்டுதல்களை வழங்கினால் பிள்ளைகளால் மீண்டு வந்து சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக தான் ஹர்ஷ் குப்தாவின் பயணம் அமைந்துள்ளது.





















