EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
EPS ADMK: சிவகங்கை லாக்-அப் மரணம் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டாதது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

EPS ADMK: சிவகங்கை லாக்-அப் மரணம் வழக்கில் பிரச்னையை முடிந்த அளவில் பூதாகரமாக வெடிக்கச் செய்யாமல் திமுக கட்டுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகங்கை லாக்-அப் மரண வழக்கு:
சிவகங்கை அடுத்த திருப்புவனத்தில் விசாரணைக் கைதி அஜித்குமார் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி எடுத்துள்ளது. பாதுகாப்பு கொடுப்பார்கள் என நம்பப்படும் காவல்துறையினரின் இந்த கோர முகம், காவல் நிலையம் செல்லவே பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அஜித்குமாரின் கொலை பல அரசியல் நிகழ்வுகளுக்கும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் இந்த விவகாரத்தில் எப்படி செயல்படுகின்றனர் என்ற கேள்வியையும் வலுவாக எழுப்பியுள்ளது.
தீவிரம் காட்டாத அதிமுக?
அதிமுக ஆட்சியின்போது சாத்தான்குளதில் தந்தை - மகன், காவல்துறை விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஆட்சிக்கே பெரும் கரும்புள்ளியாக மாறியது. ஒட்டுமொத்த திமுகவும் இந்த சம்பவத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது திறனற்ற ஆட்சியும் தான் காரணம் என முழு வீச்சில் பரப்புரை மேற்கொண்டன. முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல போராட்டங்களையும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்தார். ஆனால், அதேபோன்றதொரு சம்பவம் தற்போது நிகழ்ந்தும், அதிமுக அறிக்கைகள் மற்றும் சமூக வலைதள பதிவுகளோடு தங்களது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளது. கள போராட்டத்தில் பெரியதாக இறங்கி செயல்பட்டதாக தெரியவில்லை.
கோட்டை விடும் எடப்பாடி?
திமுக ஆட்சியில் லாக் - அப் மரணங்கள் இருக்காது என எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சி அமைந்த நான்கு ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தான் கூடுதலாக, அஜித்குமாரும் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் கள அரசியலில் இறங்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே மிஞ்சியுள்ள நிலையில், எடப்பாடியின் மெத்தனபோக்கு அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. நேற்று கட்சி தொடங்கிய விஜய் கூட, அஜித்குமாரின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ஆனால், தமிழ்நாடே கவனிக்கும் சூழலிலும், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி தற்போது வரை நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை.
டேமேஜ் கண்ட்ரோலில் திமுக:
மறுமுனையில் சாத்தான்குளம் சம்பவத்தின் போது, சட்ட-ஒழுங்கு சீர்கேட்டிற்கு முதலமைச்சர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என கூக்குரலிட்ட திமுக, திருப்புவனம் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை குற்றம்சாட்ட முடியாது என வாதாடி வருகிறது. இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடக்கூடாது எனவும் விளக்கமளித்து வருகிறது. அதுபோக, பிரச்னையை மேலும் பெரிதாக வெடிக்க விடாமல் தடுப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது. அதன் விளைவாக தான், அமைச்சர் பெரிய கருப்பண் அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்தார், முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ காலில் தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டார், அஜித்தின் தம்பிக்கு அரசாங்க வேலை, வீட்டுமனை பட்டா மற்றும் இறுதியாக வழக்கை சிபிஐக்கு மாற்றியது என அடுத்தடுத்த நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டுள்ளது. இதுபோக திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதை, முக்கிய பேசுபொருளாக மாற்றியதிலும் திமுகவின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் மூவ்:
ஒட்டுமொத்தமாக, அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திருப்புவனம் விவகாரம் பெரும் விளைவை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் தலைமையிலான திமுக தீவிரமாக உள்ளது. அதன் காரணமாகவே அடுத்தடுத்து துரிதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில், பாஜக போன்ற கட்சிகள் பல் குத்தும் குச்சி கிடைத்தாலே அதனை கடப்பாரையாக மாற்றும். ஆனால், தனது ஆட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியதை போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் திமுக ஆட்சியில் அரங்கேறியும், அந்த விவகாரத்தை அதிமுக முறையாக கையாளாதது கட்சி தீவிர அரசியலில் பின் தங்கியிருப்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் தீவிரமான செயல்பாடு தான், ஆளுங்கட்சியை நெறிப்படுத்த உதவும் என்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் முறையாக இல்லை என்பதே பொதுமக்களின் நெடுங்கால கருத்தாகவும் நிலவுகிறது.





















