ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேணும்; அஜித் லாக்கப் கொலை சாட்சி அவசர கோரிக்கை!
அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க, அஜித் குமாரின் நண்பர் சக்தீஸ்வரன் தமிழக டிஜிபியிடம் அவசர கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அஜித் குமார் கொலை வழக்கில், முக்கிய சாட்சியாகப் பார்க்கப்படும் வீடியோவை எடுத்த சக்தீஸ்வரன், தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டிஜிபியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உடலில் 44 இடங்களில் காயங்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில்,போலீசார் பைப்புகளை வைத்து அஜித்தை சரமாரியாக அடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததும் பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆளும் திமுக அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆறுதல்
எனினும் திமுக சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. அஜித் குமார் தம்பிக்கு அரசு வேலைக்கான ஆணையையும் இலவச வீட்டு மனைப் பட்டாவையும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அஜித் குமாரின் குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் சக்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
திருப்புவனம், சிவகங்கை அல்லாத ஆயுதம் ஏந்திய போலீஸ், சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மடப்புரம் பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக டிஜிபிக்கு அவர் அவசர கோரிக்கை மனு அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களையும் சந்தித்து சக்தீஸ்வரன் பேசினார்.
அஜித் குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





















