நத்தம் அருகே கோர விபத்து... கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழப்பு
கார் மோதிய வேகத்தில் காரின் முன் பக்க டயர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பறந்து சென்று காட்டுக்குள் விழுந்து கிடந்தது.
கேரள மாநிலம் மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் உண்ணிகண்ணன் (வயது 64). அவரது குடும்பத்தைச் சேர்ந்த அஸ்வினி (வயது 29) அஞ்சலி (31) ஷிவானி (4) அஜித்தா (40) அருந்ததி 18, சோபா (45) ஷோபனா (51), இமானி(3) ஆகிய 12 பேரும் கேரளாவில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று விட்டு திருச்சி-ஸ்ரீரங்கம் சென்று செல்வதற்காக மதுரையில் துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதி கண்ணிமைக்கும் நேரத்தில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பாலத்தடுப்பில் மோதியதில் காருக்குள் இருந்த சோபா (வயது 45) ஷோபனா (வயது 61) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறந்த ஒருவரின் உடல் காருக்குள் சிக்கி கொண்டது. நத்தம் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காருக்குள் இருந்து இறந்தவர் உடலை மீட்டனர். இறந்தவர்களின் உடலை மீட்ட நத்தம் போலீசார் உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் மோதிய வேகத்தில் காரின் முன் பக்க டயர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பறந்து சென்று காட்டுக்குள் விழுந்து கிடந்தது.