இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
இதன் மூலம் உயர்கல்வி செல்லும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது
மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் உயர்கல்வி செல்லும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வங்கு பற்று அட்டைகளை மாணவிகளுக்கு வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக தூத்துக்குடி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் புதுமை பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளார்.
2021ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அன்று முதல் பெண்களுக்கு என பல்வேறு அரசு திட்டங்களை தீட்டி வருகிறார். ஏற்கெனவே பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதி தரும் விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 என கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தது தமிழக அரசு.
இதில் புதுமைப்பெண் திட்டம் 2022ஆம் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முதன் முதலில் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதன்மூலம் பெற்றோரின் சுமை குறைவதோடு, இளம் வயது திருமணமும் தடுக்கப்படுகிறது என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மாணவியர். இதனாலேயே இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அரசுப்பள்ளிகளுக்கு மட்டும் என்றிருந்தது தற்போது அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உயர் கல்வி படிக்கும் 75,028 மாணவிகள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.