பரந்தூர் : உச்சகட்ட கோபத்தில் கிராம மக்கள்..! அரசு தீண்டாமை பார்ப்பதாக குற்றச்சாட்டு..!
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் மீண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் ஏகனாபுரம் கிராம மக்கள் கலந்து கொண்டு மீண்டும் எட்டாவது முறையாக பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனம் தளராமல் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
பரந்தூர் விமான நிலையம்
சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் சுற்று வட்டார 20 கிராமப்புறங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுவதால் குடியிருப்புகள், விலை நிலங்கள், நீர்நிலைகள், உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் போராட்டத்தில் கிராம மக்கள்
உண்ணாவிரதப் போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், சாலை மறியல், தலைமை செயலகத்தை நோக்கி பேரணி, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம், கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு, பள்ளிப் புறக்கணிப்பு, நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு, என பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் 751 வது நாளாக இரவு நேரங்களில் ஒன்று கூடி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்..
மேலும் விமான நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் மே1 தொழிலாளர்கள் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம், ஜனவரி 26 குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் நடைபெற்ற 7 கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.
இருப்பினும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மத்திய மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாக தொடர்ந்து நடைபெற்ற 6 கிராம சபை கூட்டங்களை கிராம மக்கள் முழுவதுமாக புறக்கணித்து விமான நிலையம் அமைப்பதற்கான தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சுதந்திர தின விழா கிராம சபை..
இந்நிலையில் ஆகஸ்ட் 15, 78வது சுதந்திர தினமான இன்று ஏகனாபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் 752 ஆவது நாளை எட்டியது. சுதந்திர தின விழாவாக இருந்தாலும் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் 752ஆவது நாளாக ஈடுபட உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள்,இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு மாநில அரசுதான் இடத்தை தேர்வு செய்தது என இந்திய விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கிராம சபை கூட்டத்தில் மீண்டும் எட்டாவது முறையாக பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
திட்டங்கள் செயல்படுத்தவில்லை..
மேலும் கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கிள்பாடி கிராமத்தில் விமான நிலையம் வரைபடத்திற்குள் அண்ணா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ரூ.4.5 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதேபோன்று வரைபடத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு கிராமங்களில் அரசு திட்டங்கள் நடைபெறுகிறது. ஆனால் ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை , அரசு தீண்டாமையை கடைப்பிடிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராம மக்களிடம் அரசு அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.