CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ஜோலார்பேட்டை அருகே, ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்கான முழு செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ள முதலமைச்சர், நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண், உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவரது முழு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதோடு, நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.
ரயிலில் வன்கொடுமைக்கு ஆளாகி தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி
திருப்பத்தூர் மாவட்டம் அவிநாசியில் வேலை செய்துவரும் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில், சித்தூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக, கோவையிலிருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் கடந்த 6-ம் தேதி பயணித்துள்ளார். பெண்களுக்கான தனி பெட்டியில் அவர் பயணித்த நிலையில், விதிகளை மீறி பெண்கள் பெட்டியில் ஏறிய ஆண்கள் இருவர், அப்பெட்டியில் தனியாக இருந்த அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
இதையடுத்து அப்பெண் கூச்சலிடவே, கே.வி. குப்பம் அருகே, ஓடும் ரயிலிலிருந்து அந்த பெண்ணை கீழே தள்ளியுள்ளனர். இதனால், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் கிடந்த அந்த பெண்ணை, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலிப் பேரில் வந்த ரயில்வே காவல்துறையினர் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சைபெற்ற அப்பெண், தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பாலீசார், ஹேமந்த் ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிகிச்சையில் இருந்த பெண்ணிற்கு கருச்சிதைவு
இந்நிலையில், 4 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக, மருத்துவர்கள் நேற்று(08.02.25) அறிவித்துள்ளனர். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அப்பெண் உயர் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உயர்ரக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிவாரண நிதி அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இந்நிலையில், ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்ட துயரச் செய்தி அறிந்து வேதனையுற்றதாக ஆறுதல் தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அப்பெண்ணிற்கான மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளதோடு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

