அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
Vidaamuyarchi: அஜித் போன்ற மிகப்பெரிய நட்சத்திரம் இருக்கும்போது வழக்கமான அஜித் படமாக இல்லாமல் விடாமுயற்சியை எடுத்தது ஏன்? என்று மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

Vidaamuyarchi: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விடாமுயற்சி:
படத்தின் டீசர், ட்ரெயிலர் என அனைத்துமே இது வழக்கமான அஜித் படமாக அல்லாமல் ஒரு குடும்ப யதார்த்த படமாக அமைந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அஜித்தின் ஆக்ஷனை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த படம் பெரியளவு விருந்து வைக்காவிட்டாலும், பெரும்பாலான ரசிகர்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
அஜித் சொன்ன வார்த்தை:
அஜித் போன்ற மிகப்பெரிய கதாநாயகனை வைத்து இதுபோன்ற சாதாரண கதைக்களத்தில் படம் எடுத்தது ஏன்? என்று மகிழ் திருமேனி விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் ஆசைப்பட்டது ஆக்ஷன் படம். ஆனால், அவர் சொன்ன ஒரு வார்த்தை. ஊரை காப்பாத்துற கதை, நாட்டை காப்பாத்துற கதை அதெல்லாம் வேணாம். ஒரு சென்சிபிளான யதார்த்தமான படத்தை கொடுப்போம். இந்த படம் எல்லா ஆடியன்சுக்கும் ஏற்புடையதா இருக்கனும். அதுனால அந்த மாதிரி படம் பண்ணுவோம் அப்படினு சொன்னாரு.
கவலைப்பட மாட்டாரு:
அவரு கூட அப்படி தொடங்குனது அந்த பயணம். படம் முழுக்க அவர் மிகப்பெரிய ஸ்டாருக்கு உண்டான பிம்பத்தை அவர் கேள்விக்கு உட்படுத்திகிட்டே இருப்பாரு. ஒரு சாதாரண மனிதர் என்ன பண்ணுவாரோ? அதை பண்ணிருப்பாரு. இதை சாதாரண மனிதர் எப்படி எதிர்கொள்வான்? பாதிக்கப்படுவான்? அந்த டிராவலை இந்த படத்துல அப்படியே காட்டனும்னு அவர் நினைச்சாரு.
அப்படி காட்டுறப்ப அவரோட இமேஜ் அடி வாங்குது.. அவரோட இமேஜுக்கு இக்கட்டை ஏற்படுத்துதனா அவர் கவலைப்பட மாட்டாரு. கதைக்கு தேவயா அதுலயே பண்ணுங்கனு சொல்லிடுவாரு."
இவ்வாறு அவர் கூறினார்.
மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படம் கணவனிடம் விவாகரத்து கேட்கும் மனைவி கடத்தப்படும் சூழலில், கணவன் மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன? என்பதே ஆகும். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
அஜித்தின் வழக்கமான மசாலா படமாக இந்த படம் இல்லாவிட்டாலும் இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.