"1 கோடி தரலனா பையன கொன்னுடுவேன்" மிரட்டிய கான்ஸ்டபிள்.. உள்ளே தூக்கி போட்ட போலீஸ்!
உத்தரப் பிரதேசத்தில் அப்பாவி ஒருவரை மிரட்டி காவலர் ஒருவர் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது மக்களை காக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே, சில நேரங்களில், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர். எண்ணிலடங்கா காவலர்கள், தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு சமூகத்தை பாதுகாத்து வரும் சூழலில், சிலர் செய்யும் செயல்கள் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கமாக மாறிவிடுகிறது.
கான்ஸ்டபிளின் சதிச் செயல் அம்பலம்:
இதை உண்மையாக்கும் விதமாக உத்தரப் பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய இடத்தில் உள்ள காவலர் ஒருவரே, அப்பாவி ஒருவரை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கோடி ரூபாய் தரவில்லை என்றால் மகனை கடத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய காவலரை உ.பி. காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் மதுராவில் நடந்துள்ளது. மதுரா சிறையில் காவலராக பணிபுரிந்து வருபவர் அஜீஸ் கௌதம்.
உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்: கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ராம்குமார் கவுதமின் மகன் அனுஜ் (21) என்பவரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. ஜெயின்ட் போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்கு உட்பட்ட மாதேரா கிராமத்தில் வசித்து வரும் அஜீஸ், அனுஜை கடத்தி கொலை செய்து விடுவதாக அவரது தந்தை ராம்குமார் கவுதமை மிரட்டியுள்ளார்.
நில பேரம் மூலம் ராம்குமாருக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் வருவது தெரியவந்ததை அடுத்து, இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளார் அஜீஸ். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவரான அஜீஸ், நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் அவரது கிராமத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய அஜீஸின் கூட்டாளிகள் 3 பேர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டப்பூரில் முன்பே கைது செய்யப்பட்டுவிட்டனர்.