State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Tamil Nadu State Education Policy: திறந்தநிலை வினாக்கள், குழு மதிப்பீடுகள், வாய்வழி மற்றும் செய்முறைத் தேர்வுகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுவர்.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மனப்பாட மதிப்பீட்டு முறையில் இருந்து, வாய்மொழித் தேர்வு, திறந்தநிலைத் தேர்வு, செய்முறைத் தேர்வு முறைகள் மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று மாநில கல்விக் கொள்கை பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாட்டுக்கென பிரத்யேக மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதன்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளது. அதேபோல, 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட உள்ளது. இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று மாநில கல்விக் கொள்கை பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு முறைகளிலும் முக்கிய மாற்றங்கள்
இந்த நிலையில் மதிப்பீட்டு முறைகளிலும் முக்கிய மாற்றங்களை மாநில கல்விக் கொள்கை பரிந்துரை செய்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள தொகுத்தறி மதிப்பீடுகள் பாடக்கருத்துகளைப் புரிந்துகொள்ளுதல், புதிய சூழல்களில் அவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பதிலாக கருத்துகளை நினைவுகூர்தலையே வலியுறுத்துவனவாக உள்ளன.
தேர்வுகளை அதிக அளவில் சார்ந்திருக்க வேண்டிய நிலையானது குழந்தைகளிடம், குறிப்பாக விளிம்புநிலைச் சமூகப் பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளிடம், மன அழுத்தத்தை உருவாக்குகிறது.
முழுமையற்ற மதிப்பீட்டு முறைகள்
அதேபோல மரபார்ந்த மதிப்பீடுகள் படைப்பாற்றல், மனப்பாங்குகள், உடல்சார் திறன், சமூக நடத்தை போன்றவற்றை போதிய அளவு மதிப்பிடத் தவறுகின்றன என்று மாநில கல்விக் கொள்கை கவலை தெரிவித்துள்ளது. இதற்கு மாற்றாக சில முன்னெடுப்புகளையும் பரிந்துரை செய்துள்ளது.
மதிப்பீட்டு முறைகளைச் சீரமைத்தல்
மனப்பாடத்தின் அடிப்படையிலான மதிப்பீட்டு முறையிலிருந்து, பாடக்கருத்துகளைப் புரிந்துகொள்ளுதல், சிந்தனைத் திறன், பெற்ற அறிவினை புதிய சூழல்களில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீட்டு முறைக்கு மாறுதல்.
புதுமையான மதிப்பீட்டு உத்திகளை நடைமுறைப்படுத்துதல்
அனைத்துப் பள்ளிகளிலும், தன் மதிப்பீடு, ஒப்பார்குழு மதிப்பீடு, செயல்திட்டப் பணி, ஒட்டுமொத்தச் செயல்பாடுகள் அடிப்படையிலான மதிப்பீடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல்.
திறந்தநிலை வினாக்கள், குழு மதிப்பீடுகள், வாய்வழி மற்றும் செய்முறைத் தேர்வுகள் ஆகியவற்றை மாணவர்களது படைப்பாற்றல், பிரச்சினைக்குத் தீர்வு காணும் திறன், ஒருங்கிணைந்து செயலாற்றும் பண்பு ஆகியவற்றை மதிப்பிடும் வகையில் மேம்படுத்துதல்.
பல்வகைப்பட்ட மதிப்பீட்டு வழிமுறைகளை வடிவமைப்பதிலும், பயன்படுத்துவதிலுமான பயிற்சிகளில் ஆசிரியர்களுக்கு வலுவூட்டல். திறன் வளர்ச்சி சார் முன்னெடுப்புகள், வள மேம்பாடு ஆகியவை மூலம் மாணவர்களது ஒட்டுமொத்தச் செயல்பாடுகள் அடிப்படையிலான மதிப்பீட்டினை நடைமுறைப்படுத்துவதை அதிகரித்தல்.
தொடர் மற்றும் வளரறி மதிப்பீடு
வினாடி வினாக்கள், வகுப்பறை கலந்துரையாடல், செயல் திட்டப்பணி மற்றும் உற்றுநோக்கல் மதிப்பீடுகள் போன்ற வளரறி மதிப்பீடுகளின் வாயிலாக திட்டமிட்ட, தொடர்ச்சியான மதிப்பீட்டு அமைப்பினை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்று மாநில கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
திறந்தநிலை வினாக்கள் கேட்கப்படலாம் என்பதால், திறந்த புத்தகத் தேர்வு முறை கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது. இதன்மூலம் மாணவர்கள், புத்தகங்களைப் பார்த்து தேர்வுக்கான விடைகளை எழுத முடியும்.






















