"பாகுபாட்டுடன் நடந்து கொண்ட சீனா" இந்திய வீரர்களுக்கு விசா மறுப்பு.. கொதித்தெழுந்த மத்திய அமைச்சர்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது சீன பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.
ஆசிய போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அனுமதி மறுப்பு:
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒனிலு தேகா, மெபுங் லாம்கு ஆகிய இரண்டு இந்திய தடகள வீரர்களுக்கு ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டு குழு, போட்டியில் பங்கு கொள்வதற்கான அங்கீகார அட்டைகளை வழங்கின. ஆனால், அதனை அவர்களால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.
அதேபோல, அருணாச்சலத்தை சேர்ந்த தடகள வீரர் நெய்மன் வாங்சு, அங்கீகார அட்டையை பதிவிறக்கம் செய்த போதிலும், சீனாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.
கொதித்தெழுந்த மத்திய அமைச்சர்:
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "நான் சீனாவில் இல்லை. நான் கோயம்புத்தூரில் எனது வீரர்களுடன் நின்று கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒலிம்பிக் விதிக்கு எதிரான ஒரு நாட்டின் இந்த பாரபட்சமான அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பை மறுத்ததால் எனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளேன்" என்றார்.
இந்த விவகாரத்தில் சீனாவிடம் இந்தியா தனது எதிர்ப்பினை பதிவு செய்திருப்பதாக கூறிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "நமது நீண்டகால மற்றும் நிலையான நிலைப்பாட்டிற்கு ஏற்ப, குடியுரிமை மற்றும் இனத்தின் அடிப்படையில் இந்திய குடிமக்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதை இந்தியா உறுதியாக நிராகரிக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது" என்றார்.
எல்லை பிரச்னை:
எல்லை பிரச்னை காரணமாக இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய – சீன எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தம் என்று சொல்லி வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதியில் அவ்வப்போது உள்ளே நுழையவும் சீனா முயற்சித்து வருகிறது.
இதற்கிடையே, லடாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோசமான மோதல் சம்பவம் நடந்தது. அதில், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், சமீபத்தில், சீனா ஒரு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவிற்கு சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை இணைத்துள்ளது. இந்த வரைபடத்தில் இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை அக்ஷயா சின் என்று குறிப்பிட்டுள்ளதுடன், அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று குறிப்பிட்டிருந்தது.