Amit Shah Angry: “நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
மக்களவையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்ற போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோபத்தில் பொங்கி எழுந்தார். அவர் என்ன கூறினார் தெரியுமா.?

‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்து நேற்று மக்களவையில் நடைபெற்ற காரசார விவாதத்தின்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் குறுக்கிட்டு கோஷங்களை எழுப்பியதால் ஆத்திரமடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோபத்தில் பொங்கி எழுந்தார். அவர் பேசியது என்ன என்பது குறித்து தற்போது காணலாம்.
ஜெய்சங்கர் விளக்கம் - எதிர்க்கட்சிகள் குறுக்கீடு
‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து வரும் நிலையில், இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
அப்போது, ‘ஆபரேஷன் சிந்தூர்‘ நடவடிக்கையின்போது, பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் குறிப்பாக, ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை, இரு தலைவர்களுக்கும் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதைக் கேட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கோஷம் எழுப்பி, ஜெய்சங்கரின் பேச்சுக்கு இடையூறு செய்தனர்.
“எதிர்க்கட்சிகள் தங்கள் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரையே நம்புவதில்லை“
எதிர்க்கட்சிகளின் இந்த செயலால் ஆத்திரமடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டென எழுந்து, எதிர்க்கட்சிகள் தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரையே நம்புவதில்லை என்றும் ஆனால், வேறு சில நாடுகளை நம்புகிறார்கள் என்பதில் தனக்கு ஆட்சேபம் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், அவர்களின் கட்சியில் வெளிநாட்டினருக்கு முக்கியத்துவம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால், அவர்களின் கட்சியின் விஷயங்களை எல்லாம் அவையில் திணிக்கக் கூடாது என்று சாடினார்.
அதோடு, இதுபோன்று நடந்தகொள்வதால் தான் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளதாகவும், இன்றும் 20 வருடங்களுக்கு அங்கேயே தான் அமர்ந்திருப்பார்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை குறித்த விளக்கிய ஜெய்சங்கர்
தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்வதாக கூறப்படும் செய்தியை மறுத்தார். மேலும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தான் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசியதாகவும், பாகிஸ்தான் நடத்த உள்ள மிகப் பெரிய தாக்குதல் குறித்து எச்சரித்ததாகவும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த மோடி, இந்தியா இன்னும் வலுவான பதிலடி கொடுக்கும் என்று கூறியதாகவும் ஜெய்சங்கர் விளக்கினார். மேலும், மே 9, 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் நடத்திய தொடர் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர், பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக மே 10-ம் தேதியன்று பல நாடுகள் இந்தியாவிற்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறினார் ஜெய்சங்கர்.
அந்த நேரத்தில், எதிர்க்கட்சியினர் மீண்டும் குறுக்கீடுகள் செய்ததால், அமித் ஷா மீண்டும் ஆவேசமானார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் பேசும்போது குறுக்கிடுவது சரியா.? - அமித் ஷா
எதிர்க்கட்சிகளின் செயலால் கோபமைடைந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, மீண்டும் எழுந்து, “அவர்களுடைய தலைவர்கள் பேசும்போது நாங்கள் பொறுமையாக கேட்டோம்“, அவர்கள் எத்தனை பெயர்களை சொன்னார்கள் என்று நாளை நான் பட்டியலிடுவேன் என்றும் அவர் கூறினார்.
மேலும், தற்போது அவர்களால் உண்மையை சகித்துக்கொள்ள முடியவில்லை என குற்றம்சாட்டிய அவர், இவ்வளவு முக்கியமான பிரச்னை விவாதிக்கப்படும் போது, வெளியுறவுத்துறை அமைச்சர் பேசும்போது இதுபோன்று இடையூறு செய்வது சரியா என்றும் எதிர்க்கட்சிகளிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இப்படி, மக்களவையில் நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில், இன்றும் அது தொடர உள்ளது. இன்று என்னென்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





















