Lok Sabha: அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
மக்களவையில் நேற்று ‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்த விவாதம் அனல்பறக்க நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் விளக்கங்களை அளித்த நிலையில், எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளன.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது, ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என்ற பெயரில் இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தியது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு, பின்னர் மோதல் கைவிடப்பட்டது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நேற்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர், இந்தியாவின் துல்லிய தாக்குதல் மற்றும் அப்போது எழுந்த சர்ச்சைகள் குறித்து விளக்கமளித்த நிலையில், எதிர்க்கட்சிகளும் சரமாரி கேள்விகளை எழுப்பியதால், விவாதம் அனல் பறந்தது.
“அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையீடு இல்லை“
‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்து மக்களவையில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஈடுபாட்டை நிராகரித்த அவர், தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் தான் கோரிக்கை விடுத்ததாக விளக்கமளித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான டிஆர்எஃப் அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், இந்த தாக்குதலை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், குவாட், ப்ரிக்ஸ் அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளும் கண்டித்துள்ளதாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில், வெறும் 3 நாடுகளே பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளதாக கூறிய அவர், பாகிஸ்தானும் சீனாவும் 6 தசாப்தங்களாக ஒத்துழைத்து வருவதாக கூறினார்.
மேலும், சீனாவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் விரிவுரைகளை வழங்குவது விசித்திரமாக உள்ளதாக குறிப்பிட்ட ஜெய்சங்கர், ஒலிம்பிக்கில் பங்கேற்கவோ, ரகசிய ஒப்பந்தங்களை போடவோ தாங்கள் சீனா செல்லவில்லை என்றும், பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் அணுகுமுறையை விளக்கவும், வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கவுமே சென்றதாக விளக்கமளித்தார்.
அமெரிக்க தலையீடு இல்லை என்பதை ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுக்கவில்லை - பிரியங்கா காந்தி
பஹல்காம் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில், அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பதை ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
சில குறிப்புகளை மட்டுமே ஜெய்சங்கர் கூறியதாவும், ஆனால் அவர் கூறாத சில விஷயங்கள் உள்ளதாகவும் பிரியங்கா தெரிவித்தார். தாக்குதல் நடைபெற்ற அந்த காலகட்டத்தில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் பேசவில்லை என்று ஜெய்சங்கர் கூறினாரே தவிர, அமெரிக்கா தலையிடவில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை, இது சுவாரஸ்யமானது என பிரியங்கா காந்தி விமர்சித்தார்.
“தாக்குதலை சமாளிக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு கெஞ்சியது பாகிஸ்தான்“
‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்து மக்களவையில் விளக்கமளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் பதில் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், தோல்வியை ஒப்புக்கொண்டு, தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதாக கூறினார்.
பஹல்காமில் இந்திய பெண்களின் குங்குமத்தை பறித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும், குங்குமத்தை இழந்த சகோதரிகளுக்காக வீரர்கள் பதிலடி கொடுத்ததாக கூறினார்.
‘ஆபரேஷன் சிந்தூர்‘ நடவடிக்கையின்போது இந்திய படைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறிய அவர், இந்திய விமானப்படையின் வலிரைமயை உலகமே பார்த்து வியந்ததாக தெரிவித்தார்.
இந்திய படைகள், எல்லையை மட்டுமல்லாமல், நாட்டின் தன்மானத்தையும் காப்பாற்றியுள்ளதாக கூறிய ராஜ்நாத், பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகளை நமது விமானப்படை தகர்த்ததாக குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை இந்தியா முழுவதும் முறியடித்ததாகவும், அணு ஆயுதத்தை வைத்து பாகிஸ்தான் மிரட்டிய நிலையில், இந்திய முப்படைகள் எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லை என்று விளக்கமளித்தார்.
எதிரிகளின் எத்தனை தளவாடங்களை அழித்தோம் என கேள்வி எழுப்பாத எதிர்க்கட்சிகள், நமக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டது என்பது தொடர்பாக மட்டுமே கேள்வி எழுப்புகின்றன என ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்தார்.
அதே நேரத்தில், ‘ஆபரேஷன் சிந்தூர்‘ சமயத்தில், கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு தெரிவித்ததற்கு அவர் நன்றி கூறினார். மேலும், நோக்கம் நிறைவேறியதாலேயே ‘ஆபரேஷன் சிந்தூர்‘ நிறுத்தப்பட்டதாகவும், ட்ரம்ப் கூறியதால் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
அதோடு, ‘ஆபரேஷன் சிந்தூர்‘ நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, நிறைவு பெறவில்லை என்றும், தேவைப்பட்டால் அந்த நடவடிக்கை தொடரும் எனவும் ராஜ்நாத் கூறினார்.
‘ஆபரேஷன் சிந்தூர்‘ தொடர்கிறது என்றால், எப்படி வெற்றியாகும்.? - காங்கிரஸ்
‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய், இந்த நடவடிக்கை இன்னும் முடியவில்லை, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என்று கூறுகிறார்கள், அப்படி சொல்லும்போது ‘ஆபரேஷன் சிந்தூர்‘ எப்படி வெற்றியாகும் என கேள்வி எழுப்பினார்.
போர் நமது நோக்கமல்ல, பிராந்தியத்தை பிடிப்பதற்கானதும் அல்ல என்று கூறுகிறார்கள்(மத்திய அரசு), ஆனால் அவ்வாறு ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பிய கவுரவ் கோகாய், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் திரும்ப எடுத்துக் கொள்வது எப்போது என்றும் வினவினார்.
மேலும், இப்போது இல்லை என்றால், எப்போது.? என கேட்ட அவர், பாகிஸ்தான் நம் முன் மண்டியிட தயாராக இருந்தது என்றால், நாம் ஏன் நிறுத்தினோம்.? யார் முன்னாள் சரணடைந்தீர்கள் என்று கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 25 முறைக்கு மேல், வர்த்தகத்தை மேற்கோள் காட்டி போரை நிறுத்தியதாகவும், 5 முதல் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். அதனால், பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் விவரத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறோம் எனவும் அவர் கூறினார்.
இப்படி, மக்களவையில் அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே விவாதம் அனல் பறந்தது.




















