ஆணவத்தின் உச்சம் - ஒன்வேயில் ஸ்கூட்டரை இடித்த SUV.. வேண்டுமென்றே முதியவரை மோதி தூக்கி வீசும் வீடியோ
Viral Video: விதிகளை மீறி சென்று ஸ்கூட்டரை இடித்து தள்ளிய எஸ்யுவி ஓட்டுனர், வாகனத்தை ரிவர்ஸில் கொண்டு வந்து வேண்டுமென்றே முதியவர் மீது மோதிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: முதியவர் மீது வேண்டுமென்றே மோதிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், குற்றவாளிக் கைது செய்யப்பட்டதாக ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்கூட்டர் மீது மோதிய எஸ்யுவி:
ஜம்முவின் காந்தி நகர் பகுதியில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள், ஆணவம் ஒரு மனிதனை எப்படி மிருகமாக மாற்றுகிறது என்பதை காட்டுகிறது. ஈவு இரக்கமின்றி செயல்பட்டு, தனது பணக்கார திமிரை காட்டிய நபருக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். சாலை விதிகளை மீறி சென்று எதிரே வந்த ஸ்கூட்டர் மீது மோதியதோடு, வேண்டுமென்றே ரிவர்ஸில் வந்து முதியவர் மீது மோதி கீழே தள்ளி, அவரை திட்டியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதியவர் மீது வேண்டுமென்றே மோதல்
வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகளின்படி, சற்றே குறுகலான சாலையில் வலது பக்கமாக ஒருவர் தனது ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டு இருந்தார். அப்போது இடதுபக்கமாக ஒரு காருக்கு பின்புறமாக வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு தார் கார், திடீரென வலதுபக்கமாக திரும்பி முன்னேறி வந்து ஸ்கூட்டர் மீது இடித்தது. இதனால் அதிலிருந்து முதியவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதிருஷ்டவசமாக பெரிய காயங்கள் ஏதுமின்றி தப்பிய நிலையில், எழுந்து நின்று காலை உதறிக்கொண்டிருந்தார். அப்போது விபத்து ஏற்படுத்திய எஸ்யுவி மீண்டும் வேகமாக பின்னோக்கி வந்து, அந்த முதியவர் மீது மோதி கீழே தள்ளியது. இதனால் படுகாயமடைந்து அவர் எழுந்து நிற்ககூட முடியாமல் சாலையில் கிடந்தார். அப்போது, விபத்து ஏற்படுத்திய எஸ்யிவிலிருந்து இறங்கி வந்த நபர், கீழே கிடந்த முதியவரை பார்த்து அவர் ஏதோ தவறு செய்தது போல திட்டிவிட்டு, சர்வ சாதாரணமாக தனது வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்றுள்ளார். சுற்றி இருந்த ஒருவர் கூட உடனடியாக முதியவருக்கு உதவவும் இல்லை. விபத்து ஏற்படுத்தியவரை பிடித்து கேள்வியும் கேட்கவில்லை.
கொதித்தெழுந்த நெட்டிசன்கள்:
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், அந்த ஈவு, இரக்கமற்ற நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.மனித தன்மையற்ற நபரின் வாகனத்தை பறிமுதல் செய்து, காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காசு படைத்தவர்கள் எது செய்தாலும் தவறாகாது, தண்டனை கிடைக்காது என்ற நம்பிக்கையிலேயே இவர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள். இதுபோன்று மனதளவில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாகன ஓட்டுனர் உரிமமே வழங்கக் கூடாது. இதனை நிச்சயமாக கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து, குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கவும் நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காரின் உரிமையாளர் கைது:
முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, சிசிடிவி காட்சிகளை கொண்டு, “காரை பறிமுதல் செய்து உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகிறோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என ஜம்மு காவல்துறை அறிவித்துள்ளது.





















